வண்ணை ஸ்ரீவீரமாகாளி அம்மன் ஆலயம்

யாழ்ப்பாணத்தில் வண்ணைப் பதியில் வடகிழக்கே அமைந்துள்ள இவ்வாலயம் தமிழரசர்களால் அமைக்கப்பட்ட பழமை வாயந்த ஆலயமாகும். 1266ம் ஆண்டு நல்லூரிலே தமிழரசமைந்திருந்த வேளையிற் புகழேந்திப் புலவர் பாடிப் பரிசுபெற்றமையும், பிறநாட்டு யாத்திரிகர் யாழ்ப்பாணத்தரசரின் உதவிபெற்றுச் சிவனொளிபாதமலைக்குச் சென்றதும் வரலாற்று நிகழ்வுகளாகும். நல்லூரை அழகு படுத்திய பரராசசேகரனே நாற்றிசைகளிலும் நகர்க் காவற் கோயில்கள் செய்ய விரும்பி கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார் கோவிலையும், தெற்கில் கைலாசநாதர் கோவிலையும் (புனரமைத்தும்) மேற்கில் வீரமாகாளி அம்மன் கோவிலையும், வடக்கில் சட்டநாதர் கோவிலையும் 1470ம் ஆண்டளவில் அமைத்தான்.

காளி, கொற்றவை, துர்க்கை எனும் நாமங்களுடன் விளங்கும் அம்பிகை வடக்கு வாசலில் எழுந்தருளியிருப்பதால் வடவாயிற் கிழத்தி எனவும் பெயர் பெற்றவள். இவ்வாலயம் வடக்கில் பருத்தித்துறை வீதியையும், கிழக்கில் வைமன் வீதியையும், தெற்கில் நாவலர் வீதியையும், மேற்கில் பருத்தித்துறை வீதியையும் கொண்டு நிலவுகிறது. வடக்கிலுள்ள பெரியகுளம் அம்மைச்சியார்குளம் என வழங்குகிறது. ஆரியச் சக்கரவத்திகள் அம்பிகையைத் தியானித்து வழிபட்டு வீரம் பெற்றனர். அவர்கள் செய்து வந்த பெருவிழாக்களுள் நவராத்திரி குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

அம்பிகையின் அழகுக் கோலம் வர்ணிக்க முடியாதது. அம்மன் பெருஞ்சாந்நித்தியம் உடைய அழகுத் தெய்வம். கட்டழகு, வீரத்திருவுரு, யோகத்திருவுரு, அருட்டிருவுரு கொண்டு அன்னையாயும், குமரியாயும் இருப்பவள். பெயரளவிற்கு கோரத் திருவுருவினளாயினும் அருள் பாலிக்கையில் போகத்திருவினள். பெருமுலைச்சியாய் பெருவயிறளாய் உள்ளவள். அமுதூட்டுபவள். பக்தர்கள் தாய் என்றும் ஆச்சி என்றும் கிழவி என்றும் வழங்குகின்றனர். உண்மையில் தாயான கிழவியுமானவள், புரத்தியானவள், பழைமையானவளாவள்.

கர்ப்பக் கிரகத்திலுள்ள சில விக்கிரகம் கருணாம்பிகை வடிவமுள்ளது. இடது திருவடியை ஊன்றி, வலது திருவடியை மடித்து ஒரு வகைச் சுகாசனத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மை எட்டுத்திருக்கரத்தினள். அப்படிப்பட்ட அம்பிகையைப் பறங்கியர் அழிக்கவென வந்தனர். கோயில் வாசலுக்கு வந்தபோது அங்கே பெரிய சிங்கமொன்று சடைவிரித்துக் கர்ச்சித்ததைக் கேட்டு உடனடியாகவே அவ்விடத்தை விட்டோடினர். இவ்வாறாக 1621ஆம் ஆண்டளவில் பறங்கியர் பூசைகளுக்குத் தடைவிதிக்க மக்களின் வழிபாடும் வாழ்வும் குன்றின. ஆங்கிலேயர் இலங்கையை நிரந்தரமாக ஆளத் தொடங்கியதும் ஓரளவு வழிபடவிட்டனர். அம்பிகைகையின் கோயிலைப் புனரமைத்து வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வந்தன.

இடைக்காலத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றபோது மந்திரலோபம், கிரியாலோபமின்றி நடைபெற்ற பிரதிட்டை ஆவாகனம், அபிஷேகம், அர்ச்சனை வழிபாடு காரணமாக அம்பிகையின் பேரருள் சுரந்து சுபீட்சம் உண்டாகியது. முன் அரசர்க்குரிய நிலம் அரசர்கள் மறைந்தபின் ஆலயத்திற்குரியதாயிற்று. வானவேடிக்கை, பரதநாட்டியம், பலகூட்ட மேளம், தேரும் திருவிழாவும் என்பன இங்கே இடம்பெற்று வந்தன. 18 நாள் உற்சவம் நாளடைவில் 25 நாட்களாகியது. தேர் உடனுக்குடன் வல்லவர்களாற் கட்டப்பெறுவது வழக்கம்.

1941ஆம் ஆண்டு சிற்பக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட சித்திரத்தேர் 2001ஆம் ஆண்டு மணிவிழாவைக் கொண்டாடியது. ஒரு தடவை இத்தேர் வெள்ளோட்டத்தைக் காண்கையில் அம்பாளே கிழவி வடிவிலே தோன்றி உருவாக்கிய சிற்பக் கலைஞருக்கு ஐந்து ரூபாவைத் தட்சணையாகக் கொடுத்ததுடன் கைவழங்காமலிருந்த அவரின் கையைச் சாதாரண முறையிற் செயற்படும் கையாக மாற்றினார். இது ஒரு அற்புதமாகும். இவ்வாலயம் தற்போது 4 சித்திரத் தேர்களைக் கொண்டு விளங்குகிறது.

வடக்குத் திசையை நோக்கியுள்ள இவ்வாலயம் உட்பிரகாரத்தில் விநாயகர், நாகதம்பிரான், சுப்பிரமணியர், சனீஸ்வரன், சண்டேஸ்வரி ஆகிய மூர்த்தங்களையும் வெளிப் பிரகாரத்தில் சந்தான கோபலர், வைரவர் ஆகியோரையும் தனித்தனிக் கோயில்காளாகக் கொண்டு விளங்குகிறது. இங்கு அம்பாள், எழுந்தருளி விக்கிரமாகவும் (சங்கிலி மன்னனால் வணங்கப்பட்டது) உற்சவ மூர்த்தியாகவும், மகிடாசுரனை வதம்புரிந்த சிங்கமேறிய எட்டுக் கரங்களுடன் கூடிய திருவுருவமாகவும் மூன்று வடிவங்களிற் காட்சி தருகின்றன. சங்கிலி மன்னன் போரிற்குப் புறப்படுகையில் ஆயுதங்களை அம்பாளின் திருவடியில் வைத்துப் பூஜை செய்து செல்வது வழக்கம். இன்றும் மன்னனின் உடைவாள் இங்கு காணப்படுவதுடன் மானம்பூவில் வாழை வெட்டிற்கும் பயன் படுத்தப்படுகிறது.

தேரோடும் வீதியும், சுத்தநீர்க்கிணறும், மருதமரமும், அரசமரமும் உள்ளன. மேற்கு வீதியில் எண்கோணத்தில் அமைக்கப்பட்ட நீர்த்தொட்டியும் காண்படுகின்றது. இங்கு நித்திய நைமித்திய பூஜைகள் சைவக்குருமார்களினால் சிறப்பாக ஆற்றப்பட்டு வருகின்றது.

நன்றி : வண்ணை ஸ்ரீவீரமாகாளி அம்மன் ஆலய இணையம்

மேலதிக விபரங்களுக்கு வண்ணை ஸ்ரீவீரமாகாளி