வள்ளக்குளம் பிள்ளையார்

கோயிலார் வளவு, மறவன்புலவு, சாவகச்சேரி
tamilnool@gmail.com
http://www.vallakkulam.com

மறவன்புலவு வள்ளையம்பதி அருள்மிகு வீரகத்தி விநாயகர் ஆலய வரலாறு

எழுதியவர்: மு. கணபதிப்பிள்ளை, அறங்காவலர்

திருமூலநாயனாரால் சிவபூமி என்று போற்றப்பட்ட ஈழ நாட்டின் வடபால், யாழ்ப்பாணம் – தென்மராட்சிப் பகுதியில் உள்ள மறவன்புலவு ஊரின் நடுநாயகமாக விளங்குகின்றது வள்ளையம்பதி. இது, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளும் ஒருங்கமைந்து விளங்குகின்றது. இத் திருப்பதியைத் திருக்குளத்தின் பெருமையை இணைத்து வள்ளக்குளப்பதி என்றும் வழங்குகின்றனர். மறவன்புலவு, யாழ்ப்பாணத்திலிருந்து பத்து மைல் தூரத்தில், கேரதீவு வழியாகத் திருக்கேதீச்சரம் செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கின்றது.

வள்ளையம்தியும் இதன் தென்பாகத்தில் உள்ள திருக்குளமும் சுமார் நாலு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.

பல நூற்றாண்டுகளுக்கு முன் மறவன்புலவில் கல்வியும், செல்வமும் சிறந்து விளங்கிய குடும்பத்தில் பிறந்து, கல்வி கற்று, ஆன்மீக வளர்ச்சி பெற்றுச் சித்தியடைந்தவர் ஞானியார் என்னும் பெரியார்.

இவர் தமது ஆத்மநாயகராக, விநாயகப் பெருமானைத் தியானித்து, பூசை செய்து வழிபாடாற்றி வரும் நியமம் பூண்டவர். பாரத நாட்டிலுள்ள சிதம்பரம், திருவாலவாய், திருச்செந்தூர் முதலான திருத்தலங்களுக்கு யாத்திரை செய்து வழிபாடாற்றும் நியதியும் உடையவர்.

தமது ஆத்ம நாயகராகிய விநாயகப் பெருமான் திரு உருவத்தை இவர் யாத்திரை சென்று வரும் பொழுது பாரத நாட்டிலிருந்தே பெற்று வந்து வள்ளையம்பதியில் வட்டவடிவமான கட்டடம் அமைத்து அதில் எழுந்தருளச் செய்து நித்திய பூசை வழிபாடு முதலியவற்றைக் குறைவறச் செய்து வந்தார். இதைத் தொடர்ந்து திருக்குளம் அமைத்தல், நிழல்தரு மரங்களை நாட்டல், பூந்தோட்டம் அமைத்தல் முதலானவைகளைச் செய்து இயற்கை வளம் பொருந்திய நெற் கழனிகளின் நடுவே ஆன்மீக வளர்ச்சியைத் தரும் அமைதியான தபோவனத்தைக் கண்டார்.

ஞானியார் காலத்தின் பின், இவர் வழிவந்தோர் அந்தணரை நியமித்து, நித்திய நைமித்திக பூசைகளையும் செய்வித்து வந்தனர். ஞானியார் அமைத்த வட்டக் கட்டடம் பழுதடைய, இப்பொழுதிருக்கும் திருமஞ்சனக் கிணற்றுக்கு நேர் கிழக்கில், மூன்று மண்டபங்களைக் கொண்ட கோயில் அமைத்து, அதில் விநாயகப் பெருமான் எழுந்தருளச் செய்து, நித்திய நைமித்திகங்களை ஒழுங்காக நடாத்தி வந்தனர். காலப்போக்கில் இக் கட்டடங்களும் சிதைவுறத் தொடங்கின. இதையடுத்து இக்கட்டடத்தின் வடக்குப் பக்கத்தில் இப்பொழுதிருக்கும் ஐந்து மண்டபங்களைக் கொண்ட கோயில் அமைத்து, அதில் விநாயகப் பெருமான எழுந்தருளச் செய்து, நித்திய நைமித்திகங்கள் சிறப்பாக நடைபெற்றுவர ஏற்பாடு செய்தனர்.

இப்பொழுதிருக்கும் ஆலயத்தின் வடபால், கோயில் கட்டிய காலத்தில் திருமஞ்சனக் கிணறு அமையாதிருந்த குறையை நிவிர்த்தி செய்யுமுகமாக வேலுப்பிள்ளை இராமநாதர் அறங்காவலராக இருந்த காலத்தில் கிணறு வெட்டி, வைரக்கல் திருப்பணி செய்யப்பெற்றது. சில வருடங்களின் பின் இக்கிணற்று நீர் உவர்த்தன்மை யடைந்தமையால் ஆதியிலிருந்த திருமஞ்சனக் கிணற்றிலிருந்தே அபிடேகத்திற்குத் தீர்த்தம் எடுக்கப்பெற்று வருகின்றது. பின் இவர் காலத்தில் கோயில் கட்டடங்கள் பழுதுகள் திருத்தி மறுசீரமைப்புச் செய்து நான்கு முறை கும்பாபிடேகம் நடைபெற்றது. அறங்காவலர் சுப்பையா அவர்கள் காலத்தில் இரு மண்டபங்கள் ஓட்டினால் வேயப் பெற்றன.

ஞானநூல் தனை ஒதல் ஒதுவித்தல்

நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா

ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்

இறைவனடி அடைவிக்கும் எழில் ஞானபூசை.

-சிவஞான சித்தியார்

வருடந்தோறும் சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மூன்று மாதங்களிலும் கந்தபுராணம் படித்தலும், ஐப்பசி மாதத்தில் நிகழும் கந்தசட்டி ஆறு நாள்களிலும் திருச்செந்தூர்ப் புராணம் படித்தலும், கார்த்திகை மாதத்தில் விநாயகர் விரதம் இருபத்தொரு நாள்களும் பிள்ளையார் கதை படித்த லும், மார்கழி மாதம் திருவெம்பாவை பத்து நாட்களும் திருவாதவூரடிகள் புராணம் படித்தலும், மாசி மாதம் சிவராத்திரி நாளன்று சிவராத்திரி புராணம் படித்தலும், சித்திரை மாதம் சித்திரா பூரணையில் சித்திர புத்திரனார் கதை படித்தலும், நெடுங்காலமாக நடைபெற்று வருகின்றது. வேலுப்பிள்ளை சுப்பையா அறங்காவலராக இருந்த காலத்தில் இப்புராணப் படிப்புகள் மிகவும் சிறப்பாக நடந்ததை அவர் காலத்தில் வாழ்ந்த முதியோரின் வாயிலாக வந்த செவிவழிச் செய்தியைப் பலர் இன்றும் நினைவுபடுத்திப் பேசுவார்கள். இவர் காலத்தின் பின் புராணங்களுக்கு உரை சொல்பவர்கள் மறவன்புலவிலும் அயல் ஊர்களிலும் அருகி வந்தமை காரணமாகப் புராணப் படிப்புகள் இங்கு சீராக நடைபெற முடியாத நிலை தொடர்கின்றது.

கந்தபுராணப் படிப்பு முடிந்த மறுநாளும், சிவராத்திரி புராணப் படிப்பு முடிந்த மறு நாளும், கதிர்காம யாத்திரீகர்கள் கதிர்காமம் சென்று வந்தபின் ஆடி மாதத்திலும் மகேசுர பூசைகள் நடைபெற்று வருகின்றன. முற்காலத்தில் மறவன்புலவிலிருந்து கதிர்காம யாத்திரை, இந்திய தல யாத்திரை சென்று வருபவர்கள் கோயிலில் தங்கியிருந்து மகேசுர பூசை முடிந்த பின்னரே தத்தம் வீடுகளுக்குச்செல்லும் நியமம் உடையவர்களாயிருந்தனர்.

வெள்ளிக்கிழமைகளில் கூட்டுப் பிரார்த்தனையும் நால்வர் குருபூசைத் தினங்களிலும் பூரணை நாள்களிலும் சைவ சமயச் சொற்பொழிவுகளும் ஆலய மண்டபத்தில் நிகழ்கின்றன, இவை கால நிலையால் இடையிடையே நடைபெறாதிருப்பதும் உண்டு.

1967ஆம் ஆண்டு தொடக்கம் 1984ஆம் ஆண்டு முடிய உள்ள காலத்தில் கோயில் மண்டபத்தில் தேவாரப் பாடசாலை ஆலய நிருவாகத்தில் நடைபெற்று வந்தது. கீழ்ப் பிரிவு மத்திய பிரிவு, மேற் பிரிவு என மூன்று வகுப்புகளில் மாணவர்கள் பயிற்சி பெற்றார்கள். மாணவர்களுக்கான திருமுறைத் தோத்திரமாலை என்னும் தொகுப்பு நூலும் 1972ஆம்ஆண்டு தொகுத்து வெளியிடப்பெற்றது. இக்காலத்தில் பண்ணிசை ஆசிரியர்களான திரு. சி. இராசையா, திரு. இ. திருஞானசம்பந்தன், திரு. சி. கார்த்திகேசு இவர்கள் ஒருவர்பின் ஒருவராகப் பணியாற்றி வந்தார்கள்

வேலம்பிராய் கண்ணகை அம்மன் கோயில் – வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் கோயில் ஆகிய இருதிருத்தலங்களுக்குமிடையில் மாமூலான சில வழக்கங்கள் நீண்ட காலமாக நடைமுறையிலிருந்து வந்தன. வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் கோயிலில் நடைபெறும் விழாக்கள் – விசேட தினங்களுக்கு, சுவாமியை அலங்காரஞ்செய்கின்ற பணியை, வேலம்பிராய் கண்ணகை அம்மன் கோயில் பூசாரிகளுள் ஒருவர் வந்து செய்யும் வழக்கம் நடைமுறையிலிருந்து வந்தது. இதற்காக மானியமும் விடப் பெற்றிருந்தது. அம்மன் கோயில் பூசகருள் ஒருவரான சின்னப்புப் பூசாரி அவர்கள் மறைவின் பின் இந்த வழக்கம் தொடரவில்லை. அம்மன் கோயில் பூசாரிகளின் மூதாதையர் மறவன்புலவைத் தாயகமாகக் கொண்டவர்கள்.

மறவன்புலவில் உள்ள கண்ணகை அம்மன் கோயில் வயல்கள் அறுவடையின் பின் சித்திரை மாதத்தில் அம்மன் கோயில் பூசாரிகளுள் ஒருவர், வள்ளையம்பதி விநாயகப் பெருமானுக்கு விசேட பூசை செய்வித்து வழிபாடாற்றி, விநாயகராலய அறங்காவலரை ‘விடுதி’ வீட்டிற்கு அழைத்துச்சென்று விதை நெல் கூடையில் இடும் வைபவத்தைச் செய்விப்பார்கள். இப்படியே ஆடி மாதத்தில் விதை நெல் எடுக்கும் போதும் விசேட பூசைகள் செய்வித்து அறங்காவலர் மூலம் கூடையிலிருந்து விதை நெல் எடுப்பார்கள். இந்த வழக்கமும் அறங்காவலர் வேலுப்பிள்ளை சுப்பையா அவர்கள் மறைவின் பின் தொடரவில்லை.

வேலுப்பிள்ளை மயில்வாகனம் அறங்காவலராக இருந்த காலத்தில் முன்னர் பாக சாலை, களஞ்சிய சாலையாகப் பயன்படுத்திய கட்டடம் பழுதுற்றமையாலும் சாத்திர விதிக்கு அமைவான இடத்தில் இல்லாமையாலும் இவைகளை அகற்றி, 1932 – 1934ஆம் ஆண்டுகளில் இப்பொழுதிருக்கும் பாக சாலை, களஞ்சிய சாலைகள் கட்டப்பெற்றன. இதைத் தொடர்ந்து காரியாலயமும் வாகன சாலையும் மணிக்கூண்டுக் கோபுரமும் கட்டப்பெற்றன. பழுதுற்றிருந்த தம்ப மண்டபம், 1958ஆம் ஆண்டில் கற்றூண்கள் நிறுவி, மர வேலைகள் செய்து ஓட்டினால் வேயப் பெற்றது. 1963ஆம் ஆண்டில் மணிக் கூட்டுக் கட்டடத்தின் தெற்குப் பக்கமாக உள்ள கிழக்குச் சுற்றுமதில் கட்டப்பெற்று வெளிக்கதவுகளும் போடப்பெற்றன. 1980ஆம் ஆண்டில் தெற்குப் பக்க மதில் கட்டத் தொடங்கி மேற்கும், வடக்கும் மணிக்கூட்டின் வடபால் உள்ள கிழக்குப் பகுதி மதில்களும் கட்டப் பெற்றன. இவர் காலத்தில் கோயில் கட்டடங்கள் மூன்று முறை பழுதுகள் திருத்தி மறுசீரமைப்புச் செய்து கும்பாபிடேகம் நடைபெற்றது. பஞ்ச லோகத்திற் செய்யப்பெற்ற விநாயகர் (பெரிய) உற்சவமூர்த் தி பிரதிட்டையும் 1958ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. 1967 ஆம் ஆண்டு தொடக்கம் விநாயகப் பெருமான் எழுந்தருளிக் காட்சி தருவதற்கான சகடையும் புதிய பெருச்சாளி வாகனமும், யானை வாகனமும் பயன்பாட்டிலிருந்து வருகின்றன.

இரண்டாம் வீதியை அகலப்படுத்தும் முகமாகக் கிழக்கு – வடகிழக்குப் பகுதிகளில் காணிகளை விலைக்கு வாங்கி, மண் நிரப்பிச் சீர்செய்யப் பெற்றது. 1971ஆம் ஆண்டில் கிழக்கில் உள்ள காணியும் 1975 ஆம் ஆண்டில் வடக்கில் உள்ள காணியும் விலைக்கு வாங்கப் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வட மாகாண அதிபராக இருந்த திரு. ஈ. ரி. டைசன் அவர்களை ஊர் மக்கள் திருக்குளக் கரையில் நின்ற மருதமர நிழலில் வரவேற்று, கோயிலின் மேற்கு வீதியாக அமைந்திருக்கும் சாலையின் தேவையை அன்று தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து திரு. ஈ. ரி. டைசன் அவர்கள் செய்த பரிந்துரையின்பேரில் மேற்கு வீதி வழியாகச் செல்லும் சாலையை அரசாங்கம் அமைத்தது. இச்சாலைக்குக் கோயில் நிலம் சுமார் பத்துப் பரப்புவரை விடப்பெற்றது.

1984ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் பஞ்சலோகத்தில் செய்த மாணிக்கவாசக சுவாமிகள் திருவுருவப் பிரதிட்டை நிகழ்ந்தது.

1985ஆம் ஆண்டு தை மாதத்தில் பஞ்சலோகத்தில் செய்த திருஞானசம்பந்க சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவுருவங்கள் பிரதிட்டை நிகழ்ந்தது.

சமயகுரவர் நால்வர் குருபூசைத் தினங்களில் நால்வரும் எழுந்தருளி வீதிவலம் வரும் விழாவும், மார்கழி மாதத்தில் திருவெம்பாவை பத்து நாள்களும் மாணிக்கவாசக சுவாமிகள் வீதி வலம் வரும் விழாவும் நடைபெறுகின்றன.

திருக்குளத்தில் வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் விநாயகர் சட்டி விரத தினத்து அடுத்த நாள் காலை, விநாயகர் காப்பு நீராடல் தீர்த்தமும், மாசி மாதத்தில் சிவராத்திரி அமாவாசைத் தீர்த்தமும் நடைபெற்று வருகின்றன.

வேளாண்மை விளைவுக்கு விநாயகப் பெருமான் திருவருளை வேண்டிச் சித்திரை மாதத்தில் ஏர்பூட்டு விழாவும், ஆடி மாதத்தில் வித்து நாட் செய்தலும், ஐப்பசி மாதத்தில் மழை வேண்டி விசேட அபிடேகம் செய்தலும், தை மாதத்தில் புதிதெடுத்தல், புதிதுண்ணலும் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளாகும்.

மீசுபலி:

வயலில் அறுவடை செய்து சூடுகள் கட்டியபின் சூடுகளை மிதிப்பார்கள். மிதித்த நெல்லைச் சப்பி, தூசு நீங்கத் தூற்றுவார்கள். தூற்றிய பொலியை அளப்பார்கள். அளக்கத் தொடங்கு முன்னர் குல்லம் ( சுளகு ) நிரம்பப் பொலியை (நெல்லை ) அள்ளித் தலைப் பொலியில் விநாயகப் பெருமானை நினைந்து வைப்பார்கள். பொலி (நெல்) அளந்து முடிந்ததும் இந்த ஒரு குல்லம் ( சுளகு ) நிரம்பிய நெல்லை விநாயகப் பெருமானுக்குக் கொடுப்பார்கள். ஒவ்வொருவரும் தத்தம் சூடு மிதிக்கும் நாளில் விநாயகப் பெருமானுக்கு மோதக பூசை செய்து வழிபடுவார்கள். இது தை, மாசி, பங்குனி ஆகிய மூன்று மாதங்களிலும் மிக நெருக்கடியாக நடந்துவரும் சிறப்பை ஆண்டு தோறும் காணலாம்.

கந்தபுராண ஏடு:

கந்தபுராண படனஞ் செய்வதற்குக் கந்தபுராணப் புத்தகம் பெற்றுக்கொள்ள இயலாதிருந்த காலத்தில், புராண படனஞ் செய்வதற்கு உதவிய கந்தபுராண ஏடு போற்றிப் பாதுகாக்கப் பெற்று வரலாற்றுக்குரிய சின்னமாக விளங்குகின்றது.

நெல்லிமரம்:

கோயிலின் முதலாம் வீதியில் வடகிழக்குப் பகுதியில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்குரிய பத்திரங்களைத் தந்து கொண்டிருக்கும் நீண்ட வயதையுடைய நெல்லிமரம் நிற்கின்றது. இந்த மரம், சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வளர்ந்து கொண்டிருப்பதாக முதியோர் பலர் கூறுகின்றார்கள்.

திருக்குளம்:

சைவ அன்பர்கள் ஆடி அமாவாசை, மாசி மகம் முதலான விசேட புண்ணிய தினங்களில் சங்கற்பம் செய்து இத்திருக்குளத்தில் தீர்த்தமாடி விநாயகப் பொருமான வழிபடுவார்கள். பிதிர்க் கடன் செய்யுங் காலத்தில் இடும் பிண்டங்களை இத்தீர்த்தத்தில் கரைத்து வழிபாடாற்றுவார்கள் கோயில்களில் நடைபெறும் பொங்கல், வீடுகளில் நடைபெறும் பொங்கல், வயல்களில் நடைபெறும் களப் பொங்கல் முதலான வழிபாட்டு வைபவங்களுகுக் எல்லாம் திருக்குளத்திலிருந்தே நீரைப் பெற்றுக்கொள்ளும் வழக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ஆசூசம் உள்ளவர்கள், நோயாளிகள், மரண வீட்டில் கலந்து கொண்டவர்கள் முதலானேர் திருக்குளத்தில் இறங்கி நீராடார். பட்டை, குடம், வாளி முதலானவற்றில் நீரை மொண்டு வெளியே எடுப்பித்துத் திருக்குளத்தின் மேற்பகுதியில் குளித்தல் முதலான சுத்திகளைச் செய்வார்கள். முற்காலத்திலிருந்து இந்த வகையாகத் திருக்குளத்தின் மகிமை பேணிப் பாதுகாக்கப் பெற்று வருகின்றது.

வள்ளையம்பதி அருள்மிகு வீரகத்தி விநாயகர் கோயில் எல்லையாக, இப்பிள்ளையார் கோயிலுக்குரிய யாப்பாக்குமரையன் வளவு வயல் உள்ளது. முன்னாளில் இந்த வளவில் ஒரு மடம் நிறுவி, மகேசுரபூசைகள் நடைபெறவும் சைவ அடியார்கள் தங்கியிருந்து கோயில் வழிபாடு செய்யயவும் ஏற்ற வசதிகளைளச் செய்திருந்தார்கள். பொருள் வசதி குறைந்தமை காரணமாக, மடம் செயற்படாமலிருந்து, மடமும் சிதைவுற்று, மடமிருந்த இடம் களிமண் மேடாகக் காட்சியளித்தது. இந்த மடமிருந்த வளவை இப்பொழுதும் மடத்து வளவு என்றே சொல்வார்கள். இந்த வளவின் வடமேற்கு மூலையில் நாகதம்பிரான் திருவுருவத்தை நிறுவி பூசை வழிபாடாற்றி வந்தனர். திரு. வேலுப்பிள்ளை அவர்கள் மறைவின் பின் இது நிகழவில்லை. பின் இத்திருவுருவத்தை வள்ளையம்பதி விநாயகர் ஆலயத்தின் தென்திசையிலுள்ள பெரியதம்பிரான் கோயிலில் எழுந்தருளச் செய்து பூசை வழிபாடாற்றி வருகின்றனர்.

ஆலயத்தின் மேற்கு வீதி வழியாக செல்லும் சாலை, இந்த யாப்பாக் குமரையன் வளவு, வயல் ஊடாகவே செல்கின்றது. இதனால் இந்த வளவு, வயல் இரு பாகங்களாகப் பிரிந்துள்ளன. பிரிந்த கிழக்குப் பகுதி வயல், மேற்குப் பகுதி வளவு. இந்த வளவில் ஊர் மக்கள் வளர்ச்சிக்கு உதவியான நெசவு நிலையம், அரசினர் வைத்தியசாலை, கிராம முன்னேற்றச் சங்கம், பாலர் பாடசாலை முதலானவை இயங்கிக் கொண்டிருக்கின்றன.

குருக்கள்:

கோயிலாக்கண்டியில் வாழ்ந்தவர் பிரம்மஸ்ரீ தம்பியையாக் குருக்கள். இவர் வேத சிவாகமங்களிலும் புராண இதிகாசங்களிலும் சிறந்த புலமையுடையவர். கிரியா பாகங்களை முறைப்படி செய்வதிலும் கை வந்தவர். இவர் காலத்தில் வள்ளையம்பதி அருள்மிகு வீரகத்திப் பிள்ளையார் கோயில், வேலம்பிராய் அருள்மிகு கண்ணகை அம்மன் கோயில் ஆகிய இரு ஆலயங்களிலும் நடைபெறும் உற்சவங்கள் குடமுழுக்கு விழா முதலான சகல விசேட தினங்களிலும் குருக்களாகப் பணியாற்றி, இரு ஆலயங்களையும் சிறப்பித்து அனைவரின் அன்பையும் பாராட்டையும் பெற்றவர்.

கோயிற் பூசகர்:

மறவன்புலவில் அந்தணர் தொடர்ந்து குடிபதியாக இல்லாத காரணத்தால் காலத்துக்குக் காலம் பிற ஊர்களில் உள்ள அந்தணர்களை நியமித்தே நித்திய நைமித்திகங்களைச் செய்விக்கும் நிலை இருந்து வந்தது. 1938ஆம் ஆண்டில், ஊரெழு வாசரான பிரம்மஸ்ரீ த. சின்னத்துரை ஐயர் அவர்களின் இளைய குமாரரான பிரம்மஸ்ரீ சி. சிவசுப்பிரமணிய ஐயர் அவர்கள் கோயில் பூசகராகப் பொறுப்பேற்று மறவன்புலவில் குடிபதியாக அமர்ந்து கோயில் நித்திய நைமித்திகங்களைக் காலந்தவறாது பத்தி சிரத்தையுடன் செய்து வருகின்றர்கள். மறவன்புலோவில் அந்தணர்கள் குடிபதிகளாக இருக்கின்றர்கள் என்ற சிறப்பைத் தந்த பெருமைக்குரியவராகவும், மக்கள் ஆன்ம ஈடேற்றம் பெற அனைத்து ஆலயங்களும் சிறப்பாக நடைபெற வேண்டுமென்ற பெருநோக்கத்தை மனதில் கொண்டு, பக்கங்களிலுள்ள ஆலயங்களுக்கும் தன்னாலான தொண்டுகளைச் செய்து, சிவப் பணியாற்றி அனைவரின் அன்புக்கும் பாராட்டுக்கும் உரியவராகவும் திகழ்கின்றர். இவரின் துணைவியார் திருமதி சிவசுப்பிரமணிய ஐயர் பரமேஸ்வரி அம்மா அவர்கள், ‘நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு, புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டு’ என்ற அப்பர் சுவாமிகள் திருவாக்கை நினைந்து சிவப்பணி செய்கின்ற செம்மனச் செல்வியாக விளங்குகின்றார்.

சைவக் குருக்கள்:

வேதாரணியம் சைவக் குருக்கள் பரம்பரையினரே இங்குள்ள சைவ மக்களுக்கு மந்திர உபதேசம், வித்தியாரம்பம், திருமணம் முதலான சுபக்கிரியைகளையும் பிதிர்க் கடன் முதலான அபரக் கிரியைகளையும் செய்து வந்தனர். ஆண்டு தோறும் வேதாரணியத்திலிருந்து இங்கு வந்து போகும் சைவக் குருக்களுள் ஒருவர், பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில், கோயில் களஞ்சிய அறையில் தங்கியிருந்து, சிவபூசை, மந்திர உபதேசம், திருமுறை ஒதல் முதலான சற்கருமங்களைச் செய்து வருவார். இவர்களிடம் மந்திர உபதேசம் பெற்ற குடும்பத்தார், சிவபூசை முதலான நற்கருமங்களைச் செய்வதற்கான திரவியங்களைக் கொடுப்பதோடு தங்கள் வயலில் விளைந்த நெல் மீசுபலியையும் அளித்துக் குருக்களின் ஆசியைப் பெற்று மனநிறைவு பெறுவார்கள்.

தினசரி தத்தம் வேலைகளை முடித்துவிட்டு மாலை நேரத்தில் ஆலய தரிசனம் செய்ய வருபவர்கள் பூசை முடிந்த பின்னர் சைவக் குருக்கள் அவர்களுடனும் உரையாடிச் செல்வார்கள். இந்த உரையாடலின் போது சைவசமய நெறிமுறைகள், கோயில் வழிபாடு, விரதங்களின் மகிமை, புராண இதிகாசங்கள், சிதம்பரம், திருவாரூர், திருவாலவாய், காசி முதலான புண்ணிய தலங்களின் வரலாறு, இன்னும் இவைபோன்ற விடயங்களும் இடம்பெற்று ஒரு கருத்தரங்கம் நடப்பதையே காணலாம். முன் நிலாக் காலத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதோடு நேரமும் நீண்டதாக அமையும். சிவஸ்ரீ சந்திரசேகரக் குருக்கள் அவர்களின் பின் இந்த நிகழ்வுகள் நடை பெறவில்லை. இதன்பின் யாழ்ப்பாண நகரத்திலிருக்கும் வேதாரணியம் சிவஸ்ரீ தியாகராசக் குருக்கள் மூலம் கோயில் மண்டபத்தில் இடையிடையே மந்திர உபதேசம் நடைபெற்று வருகின்றது. இலங்கை, இந்தியா ஆகிய இருநாடுகளும் சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த நாடுகளுக்கிடையேயுள்ள கட்டுப்பாடுகளால் இவர்கள் வருகை அருகி வருகின்றது.

பூமாலை புனைந்தளித்தல்:

மறவன்புலோவைத் தாயகமாகிக் கொண்டவர் சிவத்திரு. கி. தேவராசா அவர்கள். இவர் தமது மூதாதையர் வழிநின்று வள்ளையம்பதி விநாயகப்பெருமான அலங்காரஞ் செய்வதற்கான பூமாலைகளைப் புனைந்தளிக்கும் திருத்தொண்டைச் சிறப்பாகச் செய்து வருகின்றார். இதற்காக மானியமும் விடப்பெற்றுள்ளது.

வெண்துகில் விமானம்:

விநாயகப்பெருமான் எழுந்தருளிக் காட்சி கொடுக்கும் திருநாள்களில் வெண்துகில் விமானத்தால் மண்டபத்தை அலங்காரஞ் செய்யும் திருத்தொண்டை அழகாகத் தமது முன்னோர் வழி திரு. சி. மார்க்கண்டு செய்து வருகின்றார்.

சந்நியாசியார்:

ஆதியில் விநாயகரை வள்ளையம்பதியில் பூசை வழிபாடாற்றிச் சித்தியடைந்த ஞானியார் வாழ்ந்த சில நூற்றாண்டுகளின் பின் வாழ்ந்த ஞானியார் வழிவந்தோருள் ஒருவர் சந்நியாசியார். இவரும் ஞானியார் நெறி நின்று விநாயகரைப் பூசித்துச் சித்தியடைந்தவர்.

சயம்பு உபாத்தியாயர்:

இவரும் வள்ளையம்பதி விநாயகரை ஆத்ம நாயகராகக் கொண்டு வாழ்ந்து சித்தியடைந்தவர். விநாயகர் பேரில் தோத்திரங்களும் ஊஞ்சற் பாக்களும் பாடித் துதித்தவர். வாழ் நாளில் ஆண்டுதோறும் புராண படனம் வள்ளையம்பதியில் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தவர். இங்கு இவர் வாழ்ந்த வளவு, ‘சயம்பர் வளவு’ என வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. வள்ளையம்பதி விநாயகர் பேரில் சயம்புப் புலவர் பாடிய பாடல்கள் ஏட்டுப் பிரதிகளிலிருந்து சிதைந்து போனமையால் இக் காலத்தவர் இவற்றால் பயன்பெற முடியவில்லையே என்ற வருத்தம் கல்வி உலகிற்கு உண்டு. தமிழ் வளர்த்த பெரியார் இருபாலைச் சேனாதிராசா முதலியார் அவர்கள் மாணக்கருள் ஒருவரான இவர் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்.

சிவயோக சுவாமிகள்:

1939ஆம் ஆண்டு நிகழ்ந்த சிவராத்திரித் திருநாளில் பகலும் இரவும் பன்னூற்றுக்கணக்கான அடியார்களுடன் கொழும்புத்துறை சிவயோக சுவாமி அவர்கள் இவ்வாலய மண்டபத்தில் தியானத்திலமர்ந்திருந்து திருவருள் பெருக்கியமை ஒரு பேரற்புதமான திருவருட் காட்சியாகும். இதில் அன்று கலந்து கொண்ட அடியார்கள் இன்றும் இதை நினைவுபடுத்திப் போற்றுகின்றர்கள்.

இத் தல மகிமையை யாவரும் அறிந்து ஆன்ம ஈடேற்றம் பெற வழிகாட்டிய இச்சிவ அடியார்களே என்றும் நினைந்து துதிப்போமாக.

தோத்திரங்கள்:

பொன்னம்பலம் சபாபதிப்பிள்ளை மறவன்புலவைத் தாயகமாகவும் கைதடியை வதிவிடமாகவும் உடையவர். இலக்கிய இலக்கண அறிவும் புராண இதிகாசங்களில் புலமையுமுடையவராயிருந்த இவரை எல்லாரும் புலவர் என அழைப்பார்கள். இத்தல விநாயகர்பேரில் தோத்திரங்களும் ஊஞ்சற் பாக்களும் பாடித் துதித்தவர். ஏட்டுப் பிரதிகளிலிருந்த இவை பிற்காலத்தவர்களுக்கும் பயன்படாமல் போனமை வருத்தமே. மாவிட்டபுரம் கந்தசுவாமியார் பேரில் இவர் பாடிய தோத்திரங்கள் அச்சிடப் பெற்றமையால் அதில் ஒரு பிரதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருக்கும் பாக்கியம் பெற்றது. இது முருகப் பெருமான வேண்டுதல் செய்யவும் புலவர் புலமையை அறியவும் வழிகாட்டியாக விளங்குகின்றது.

விநாயகர் அந்தாதி:

மறவன்புலவைத் தாயகமாகப்பெற்றுக் கோயிலாக்கண்டியை வதிவிடமாகக் கொண்டவர் திரு சி. பொ. குழந்தைவடிவேலு. இவர் புராண இதிகாசங்களில் புலமையும் நாடகக் கலையில் மிகுந்த ஈடுபாடுமுடையவர். சுமார் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மறவன்புலவிலிருந்த சேட்ஸ் மிஷன் தமிழ்ப் பாடசாலையில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். இத்தல விநாயகரை, ஊஞ்சற் பாக்களும் அந்தாதி முதலான தோத்திரப் பாக்களும் பாடித் துதித்தவர். இவர் பாடிய அந்தாதி முதற் பதிப்பு இலவச வெளியீடாக 25-2-1949இல் வெளிவந்தது, இரண்டாம் பதிப்பு அறங்காவலர் வே. மயில்வாகனம் நினைவு நாள் வெளியீடாக 12-12-79 இல் வெளிவந்தது. இவரது, உரும்பராய் கற்பக விநாயகர் அந்தாதி கைப் பிரதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

விநாயகர் ஊஞ்சல்:

புராணங்களுக்கு உரை சொல்வதில் புலமை நிறைந்தவர் சங்கரப்பிள்னை கந்தையா. இவர், வள்ளைக்குளப்பதி விநாயகர் பேரிற் பாடிய ஊஞ்சற் பாக்கள், இலவச வெளியீடாக 1978ஆம் ஆண்டு மார்கழித் திங்களில் வெளிவந்தன. இவர் தனது தந்தையாரான சங்கரப்பிள்ளை உபாத்தியாயரிடம் புராண இதிகாசங்களைக் கற்றுப் புலமை படைந்தவர். வள்ளையம்பதியில் ஆண்டுதோறும்நடைபெறும் புராண படனத்திற்குத் தந்தையாரும் தனயனும் உறுதுணையாக விளங்கியவர்கள்.

விநாயகர் பதிகம்:

சென்னை மயிலாப்பூர் கலைமகள் பத்திரிகை ஆசிரியர் வாகீச கலாநிதி பிரம்மஸ்ரீ கி. வா. ஜெகந்நாதன் அவர்கள், 1960இல் இத்தலத்தில் நடந்த திருமுறை விழாவில் கலந்து சொற்பொழிவாற்ற வருகை தந்தபோது விநாயகரைத் தரிசித்துப் பாடித் துதித்த வள்ளைக்குளப்பதி விநாயகர் பதிகம், முதற்பதிப்பு 12.06.87இல் வெளிவந்துள்ளது.

ஒரு புண்ணிய பூமி:

இலங்கையில் இனப்பிரச்சினை உச்சக் கட்டடத்தை யடைந்த 1987ஆம் ஆண்டு ஐப்பசி மாதம், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பிரச்சனை வெள்ளம் மக்களை அடித்துச்சென்று ஊர்ஊராக அடைக்கலம் புகவைத்தது. இது உலகறிந்த செய்தி. பிற ஊர்களிலிருந்து மறவன்புலோவுக்கும் மக்கள் அகதிகளாக வந்தனர். மறவன்புலோ வாசிகள் தங்களால் முடிந்தவரை எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து ஆதரித்தார்கள். மறவன்புலவில் உள்ள ஆலயங்களில் எதுவும் இக் காலப் பகுதியில் சேதத்திற்குள்ளாகவில்லை. வழமையான நித்திய பூசைகளை, விழாக்களைக் காலந் தவறாது நடாத்தித் தமிழ்மக்களின் இன்னல்களை நீக்கியருள இறைவனை வேண்டி அமைதியாக வாழ்வதை, அகதிகளாக வந்தவர்கள் கண்டார்கள். வந்தவர்களின் கூட்டமும் காலை மாலை ஆலயங்களுக்குச் சென்று அமைதி நிலவவேண்டி வழிபாடாற்றி வந்தது. வள்ளையம்பதி ஆலயத்திற்கும் இந்நாள்களில் அகதிகளாக வந்தவர்கள் காலை மாலை அதிகமாக வருவார்கள். ஒருநாள் இங்கு தினமும் வழிபாடாற்ற வந்து செல்லும் அகதிகளுள் ஒருபெரியவர் ஆலய வாயிலில் நின்றவர்களைப் பார்த்து, ‘மறவன்புலவு ஒரு புண்ணிய பூமி. காலை மாலை வள்ளைப்பதியானை இந்த வெண்மணலில் வீழ்ந்து வணங்கி, எங்கள் இன்னல்களைப் போக்க வேண்டுதல் செய்வோம். இந்த வாய்ப்பை எமக்குத் தந்த பிள்ளையாரை மேலும் மேலும் வணங்குவோம்’ எனக் கூறிக் கண்ணிர் சொரிந்தார். இக் காட்சி, கண்டவர்கள் மனதை விட்டகலாத ஒரு திருக்குறிப்பாக அமைந்தது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களிலும் இன்றும் இங்கு சைவாலயங்களே மக்கள் வழிபாட்டிற்குரியனவாக இருந்து வருவது இந்த ஊருக்குள்ள தனிச்சிறப்பாகும். எனது தாயார் மு. குழந்தைநாச்சனும் பாட்டி வே. சிவகாமிப்பிள்ளையும், மாமனார் வே. சுப்பையாவும், பெரியதாயார் இராமலிங்கம் தங்கமுத்துவும், முதியவர்கள் சிலரும் இக் கோயில் சம்பந்தமான விடயங்களைப் பேசும் போது நான் கேட்டறிந்தவைகளையும் எனது காலத்தில் நடந்தவைகளையும் நினைவிற் கொண்டு சுருக்கமாக இந்த வரலாற்றை எழுதியுள்ளேன்.

விநாயகர் திருவடி வாழ்க

கோயிலுக்குரிய பாடல் :

சீரான நன்மறவை சேர்வள்ளை யம்பதிவாழ்
ஓரானை மாமுகத்தெம் முத்தமனே – நேரான
உந்தனருள் மேனியுறு மொப்பில்நறும் மாலையென
அந்தாதி பாடவரு ளாய்.