தனங்கிளப்பு (பெரும்படை) அம்மன் ஆலயம்

கடலலைகளின் அமைதியான ஆர்ப்பரிப்பு, சூழவும் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் பச்சைத் தாவரங்கள், வெண்மணல் பரப்பு, என இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் தனங்கிளப்பு கடற்கரையோரத்தில் இவ் அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மிகுந்த சக்தி வாய்ந்த இவ் அம்மன் ஆலயம் சக்தி வழிபாட்டின் ஓர் அங்கமான கண்ணகி வழிபாட்டின் பண்டைய வரலாற்று அம்சங்களுடன் தொடர்புடையது.
இவ் ஆலயத்தில் பங்குனித் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நோயிலிருந்து காப்பாற்றுமாறும் மழை வேண்டியும் ஊர்மக்களால் நோ்த்திகள் வைத்து வழிபாடு இயற்றப்படும். மழை வேண்டி தேங்காய் உடைத்தால் நிச்சயம் மழை பெய்யும் என்பது இப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
பழைய காலங்களில் இவ்வாலயத்திற்கு தூர இடங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கமாகும். நாகதேவன் துறை, கொழும்புத்துறை போன்ற இடங்களிலிருந்து அடியவர்கள் தோணிகளில் கடல் மார்க்கமாக வருகை தந்து அம்மனை வழிபட்டுச் சென்றார்கள்.
முன்னைய காலங்களில் மத்தியான வேளைகளிலும் அந்தி சாயும் பொழுதுகளிலும் ஆலய சூழலில் மக்கள் நடமாடவே அஞ்சுவார்கள். இங்கு உடுக்கடித்து கலையாடி வழிபாடு மேற்கொள்ளப்படும். திருநீறு போடுதல்,  மந்திரித்து நூல் கட்டுதல்,  தண்ணீர் ஓதிக் கொடுத்தல் போன்றவற்றின் மூலம் பக்தர்களுக்கு ஏற்பட்ட நோய்கள் தீர்த்து வைக்கப்படும். இச் செயற்பாடுகளில் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர்.
தற்போது இவ் அம்மன் ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாலயத்தை திருத்தி மீண்டும் புதுப் பொலிவு பெறும் வகையில் புதிய வடிவமைப்புடன் அமைக்கவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
நன்றி- தகவல் – க.துஷி
மூலம் – மறவன்புலோ இணையம்