வாரிவன நாதர் சிவாலயம்

வாரிவன நாதர் சிவாலயம்


வாரிவனம் அல்லது வாரிவனேஸ்வரம் என்னும் பதி சாவகச்சேரி நகரிலே அமிர்தபாஷணி சமேத சந்திரசேகர வாரிவன நாத சிவன் என்னும் நாமத்துடன் கோயில் கொண்டெழுந்தருளி சிவன் அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தை விருப்பாக்கன் என்றும் சோழமன்னன் வழிபட்டதாகவும் தெட்சணகைலாய மான்மியம் கூறுகின்றது. கோயிலைச் சார்ந்த திருக்குளத்தின் அருகில் சிவலிங்கத்தையும் அம்பாளையும் அக்காலத்து அன்பர்கள் புதைத்து வைத்துள்ளனர். டச்சுக்காரர் ஆட்சியில் இவ்வாறு செய்ய நேர்ந்தது. பின்னர், ஆங்கிலேயர் ஆட்சியில் தாமே வெளிப்பட்டதாகவும் வரலாறுகள் உள்ளன. எங்கும் நீர்வாழித் தடாகம் காட்சியளித்த படியால் வாரிவனம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். அருள் வாரியான அப்பன் ஆன்மகோயன் உய்யத் தம்மருள் வாரி வழங்கிய இடம் என்றும் கூறலாம். இங்குள்ள சிவலிங்கம் காசியில் கிடைத்த பாணலிங்க விசேடமுடையது. வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயம் அத்திவாரமிட்ட சுபதினத்திலே இவ்வாலயமும் அத்திவாரம் இட்டதாக அறியக்கிடக்கிறது.பாடல்பெற்ற புண்ணிய தலமான திருக்கேதீஸ்வரம் இரு இலிங்கங்கள் வைத்து பூசிக்கப்படுவது போல வாரிவனேஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளது. இக்கோயில் பரிவார மூர்த்திகளுடன் ஐந்து காலப்பூசை, மஹோற்சவம், இலட்சார்ச்சனை, புராண படனங்கள், குருபூசைகள், மாதாந்த பிரதோச உற்சவங்கள் எல்லாம் நடைபெற்றதுடன் மஹோற்சவ காலம் ஐந்து தேர்கள் இருந்ததாகவும் அவை கைவிடப்பட்டு மூன்று தேர்கள் இருந்ததாகவும் பின்னர் ஒரு கட்டுத்தேர் இருந்ததாகவும் 1999ம் ஆண்டு மஹோற்சவம் இறுதியாக நடந்ததாவும் அறியமுடிகிறது. இவ்வாலயத்தின் மூன்று சிறப்புக்களை காணமுடிகிறது. இறைவன் ஆன்மகோடிகளை ஆட்கொள்ள அமைந்த ஆலயங்கள் மூன்று சிறப்புக்களை உடையன. அதனை அறிந்த தலயாத்திரை செய்வோர் ஒரு மண்டலம், அரைமண்டலம், கால்மண்டபம் அல்லது சில நாட்கள் தங்கியிருந்து தம் குறைகளை நீக்குவர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பனவே இக்கோயிலை மெருகூட்டுகின்றன. இத்தலத்தில் வசிப்பதும் தீர்த்தமாடுவதும் மூர்த்தி தரிசனம் செய்வதும் பெரியபாக்கியமாகும். நமது வாரிவனத்திலும் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புக்களையும் அறிந்து பயன் பெறும் பாக்கியம் சைவமக்களுக்குண்டு.அறிந்தவரையில் கோயில் பரிபாலனம் பரம்பரை தர்மகர்த்தா வழியாக திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

முற்காலத்தில் இன்றைய சாவகச்சேரியினை வாரி வனநாத ஈசுரம் என்றே அழைப்பார்கள். வாரி என்ற புற்களைக் கூடுதலாகக் கொண்ட ஒரு பாதை இருந்ததாகவும் அதன் வழியே பால் கொண்டு போன ஒருவர் பல தடவை தடுக்கி விழுந்த போது ஒரே இடத்தில் பால் ஊற்றப்பட்டது. அந்த இடத்தில் சிவலிங்கத்தைக் கண்டெடுத்தனர். அதில் எழுந்த கோயிலே வாரி – வனம் – கோயில் என்பது வாரிவனநாதர் கோயில் ஆனது. இக் கோயில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது. ஆனால் அதன் திருமஞ்சனக் கிணற்றில் லிங்கத்தையும், அம்பிகையையும் பக்தர்கள் எடுத்து ஒழித்துவிட்டனர். இந்த திருமஞ்சனக் கிணறு இன்றும் சாவகச்சேரி பேரூந்து நிலைய வளவினுள் இருக்கிறது. அத்தோடு பேரூந்து நிலையத்திற்கு அருகில் கிராமக்கோட்டு வளவினுள் இப்பொழுதும் சில கோயிற் சிற்ப இடிபாடுகளைக் காணலாம். ஆங்கிலேயர் காலத்தில் ஐந்து அடி நீளமான அமிர்தபாலகால பூசணி அம்பாளும், சிவலிங்கமும் மீள எடுக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டது. இதேவேளை சில சொரூபங்கள் குளத்துக்குள் இருந்தும் கண்டெடுக்கப்பட்டன. இந்தக் கோயிலை வாரிவனநாத கோயில் அல்லது வாரியப்பர் கோயில் என்று கூறுவர். இதற்குப் பக்கத்தில் அமிர்தபாசணி சமேதசந்திரசேகர் சிவன் கோயில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில்களிற்குப் பின்பாக உள்ள இத்தியடி மரத்தில் பிள்ளையார் சொரூபம் போல் இயல்பாகவே இருக்கிறது. இதனை மகிமையாகக் கருதுகிறார்கள். இங்குள்ள அம்மன் சிலை வளர்ந்து கொண்டு வருகின்றது. தற்போது சராசரி மனித உயரத்தில் காணப்படுகின்றது.