தம்புருவளை ஶ்ரீ சித்தி விநாயகர்

ஈழத்தில் சிரமெனப் பொலிந்து சிவமணம் கமழ்ந்து இலங்குவது யாழ்ப்பாணக் குடாநாடு. இக்குடாநாட்டில் அமைந்த வடமராட்சிப் பகுதியில் விளங்கும் பருத்தித்துறை எனும் நகரைச் சார்ந்து தும்பளை என்னும் பதியாகும். சமுத்திரதேவி தன் இரு கரங்கள் கொண்டு அணைக்கும் வனப்பு வாய்ந்த இப்பகுதியில் வடபால் சித்திவிநாயகப் பெருமான் அமர்ந்து திருவருள்புரியும் தம்புருவளைத் தலம் விளங்குகிறது. இத்தலத்தின் வரலாறு காலவெள்ளத்தில் மறைந்து போகாமல் காப்பாற்றப்பட வேண்டிய தொன்றாகும். எனவே அவ் வரலாற்றை சுருக்கமாக எழுதி வெளியிடும் பணியை மேற்கொண்டுள்ளோம்.
1877ம் ஆண்டிற்குப் பிந்தியனவும் ஆலயத்துக்கு உரியனயும் ஆகிய சில பழைய ஏட்டுச்சுவடிகளும், ஆவணங்களும், வரவுசெலவுக் கணக்குப் புத்தகங்களும், வயதிலும் அறிவிலும் மூத்தோர்களிடம் கேட்டறிந்த சில குறிப்புக்களும், பிறவும் தலவரலற்றை எழுதுவதற்குப் பெரிதும் உதவின.
1505ம் ஆண்டு தொடக்கம் 1658ம் ஆண்டு வரையும் போத்துக்கீசரும், அவர்களைத் தொடர்ந்து 1796ம் ஆண்டு வரையும் ஒல்லாந்தரும் ஈழத்தின் கரையோரப் பிரதேசங்களை ஆட்சி புரிந்தனர். அக்காலத்தில் அவர்கள் தம் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகப் பல சைவ ஆலயங்களைக் கொள்ளையடித்து இடித்து அழித்தனர். நயத்தாலும் பயத்தாலும் சைவமக்களைக் கிறிஸ்தவராக்கினர். அவர்களின் கொடுஞ்செயல்களால் நாட்டில் சைவநெறி குன்றிப் பிறசமய இருள் சூழ்ந்தது. எனினும் மக்கள் பலர் சைவநெறியினில் நிலைநின்றோழுகி, அதனை மறைமுகமாக போற்றி வந்தனர். அத்தகைய சைவப்பற்று மிக்க பெரியவர்களிற் சிலர் மக்களுக்கு வழிகாட்டிகளாய், நமது தும்பளைப்பகுதியிலும் வாழ்ந்து வந்தனர். அவர்களே தம்புருவளை சித்திவிநாயகர் ஆலயத்தின் தோற்றத்திற்கு வித்திட்ட மூலகர்த்தாக்கள் ஆவர்.
ஆரம்பகாலம்:
பறங்கியரின் ஆட்சிக் காலத்துக்கு உட்பட்ட ஏறக்குறைய 1730ம் ஆண்டினைத் தம்புருவளைச் சித்திவிநாயகர் ஆலயத்தின் தோற்றத்துக்குரிய ஆரம்பகாலம் என்று கூறலாம். “அம்புலியம்பதி” என்னும் அழகிய திருநாமமுடைய காணியே தம்புருவளைத் தலம் அமைந்து விளங்கும் இடமாகும். ஆல், அரசு, புளி, தென்னை, பனை முதலிய மரங்கள் செறிந்தோங்கிச் சோலையாய் விளங்கிய இக்காணியில் சிறிய ஓர் ஆலமரத்தின் நிழலில் அன்பர்கள் கொட்டில் ஒன்றை அமைத்தனர். இந்தத் திரு ஆலமரமே நாற்புறமும் கிளைகள் பலவற்றையும் பரப்பி, வானுற ஓங்கி வனப்புற வளர்ந்து குளிர்நிழலைத் தந்து, சித்தி விநாயகப் பெருமானின் திருவருட் பொலிவினைக் காட்டிக்கொண்டிருக்கும் தலவிருட்சமாகத் திகழ்கிறது. ஆலமரத்தின் கீழ் அமைந்த கொட்டிலில், இந்தியாவின் தமிழகத்திலிருந்து தருவிக்கப்பட்ட விநாயகர் விக்கிரகம் ஒன்றை வைத்துப் பொங்கலும் பூஜையும் செய்து, மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த விக்கிரகம் மிகவும் சிறியவடிவம் உடையது. தற்போது கர்ப்பக்கிரகத்தில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் மூல முர்த்திக்கு அண்மையில், வடக்குப் புறமாக இவ்விக்கிரகமும் பிரதிட்டை செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். இதனைப் போன்ற அமைப்புடைய சிறிய விநாயகர் விக்கிரகங்கள் வடமராட்சியிலுள்ள விநாயகர் ஆலயங்கள் சிலவற்றில் காணப்படுகின்றன. உதாரணமாக பருத்தித்துறைக் கொட்டடிச் சித்திவிநாயகர் ஆலயத்தில் இதனைக்காணலாம்.



மடாலயம்:
கொட்டிலில் விநாயகரை வழிபட்டு ஏறக்குறைய நூற்றாண்டுகள் கழிந்தபின், மக்கள் நாற்புறமும் மதில் சூழ மடாலயம் ஒன்றை அமைத்தனர். அவர்கள் கொட்டிலில் வைத்து வழிபட்டு வந்த விநாயகர் விக்கிரகத்தை மடாலயத்தின் மகாமண்டபத்திலும், புதிதாக இந்தியாவின் தமிழகத்திலிருந்து தருவிக்கப்பட்ட வேறொரு விநாயகர் விக்கிரகத்தை மூலஸ்தானத்திலும் பிரதிட்டைசெய்து, மிகவும் சிறப்பாகப் பூஜித்து வந்தனர். இரண்டாவது விக்கிரகம் முன்னைய விக்கிரகத்திலும் உருவத்தில் பெரியது. இவ்விக்கிரகமே தலவிருட்சமாகிய திரு ஆலின்கீழ் தற்போது பிரதிட்டை செய்யப்பட்டு விளங்கும் விக்கிரகமாகும். மடாலயங்கள் அமைக்கப்பட்ட காலத்தில், அம்புலியம்பதியின் அருகில் இருந்த சில காணிகள் உரியவர்களால் அதற்கு வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் மடாலயத்தை அமைத்து விநாயகப்பெருமானை வழிபட்டு வந்ததோடு, திருப்புளிய மரத்தின்கீழ்ச் சூலங்களை வைத்து வைரவ சுவாமியையும், வடக்கு வெளி வீதியின் தென்கரையில் வைத்துச் சிவ அம்சம் பொருந்திய நாகதம்பிரானையும் வழிபட்டுவந்தனர். இந்த நாகதம்பிரான் விக்கிரகமும் இந்தியாவின் தமிழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டதாகும். அக்காலத்தில் ஆனி உத்தரத் திருவிழாவும், திருவெம்பாவைத் திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றன.
அக்காலத்தில் மடாலயத்துக்கு வெளியே தென்கிழக்கு மூலையில், பூஜகர் வசிப்பதற்கு வீடு ஒன்றும் வடக்கு வெளி வீதியில் பூஜகரின் உபயோகத்திகுக் கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டன. அதேகாலத்தில் அன்பர்கள் உபயோகத்துக்காக வடமேற்கு மூலையில் வயலெல்லை சிற்றர் – கணபதிப்பிள்ளை அவர்களால் இருகுளங்களும், அவற்றின் வடக்கில் சிறு கிணறு ஒன்றும் கட்டப்பட்டன. வடக்கு வெளிவீதிக் கிணறு 1917ம் ஆண்டில் தூர்க்கப்பட்டது. மடாலயத்தின் சுற்றுமதிலின் ஒருபகுதி இன்றும் ஞானவைரவர் ஆலயத்தைச் சுற்றி மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதைக் காணலாம்.
ஆலயம்:
1891ம் ஆண்டில், பெரிதாக ஆலயம் அமைக்க வேண்டும் என்ற எழுச்சி மக்களது உள்ளத்தில் உதித்தது. அதனால் அவர்கள் விநாயகர் விக்கிரகங்களை ஒருபுறத்தில் வைத்து வழிபட்டுக்கொண்டு மடாலயத்தை அழித்தனர். 1894ம் ஆண்டில் மூலஸ்தானத்தை வைரக்கற்களால் கட்டி எழுப்பத் தொடங்கினர். ஐந்துவரிக் கற்கள் மாத்திரம் வல்லிபுரம் – வைரமுத்து அவர்களால் மேசன் வீரகத்திப்பிள்ளை அவர்களைக் கொண்டு எழுப்பிக் கட்டுவிக்கப்பட்டன. முழுவதையும் வைரக்கற்களால் கட்டிமுடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் 1901/03ம் ஆண்டு காலத்தில் விமானத்தை எழுப்பி மூலஸ்தானத்தையும் மகாமண்டபத்தையும் கட்டி முடிந்தது. இந்தியாவின் தமிழகத்திலிருந்து தருவிக்கப்பட்ட பெரிய விநாயகர் விக்கிரகத்தைப் பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தனர். இவ்விக்கிரகமே தற்பொழுதும் மூலஸ்தானத்தில் விளங்குகிறது.
1900ம் ஆண்டில் தரிசனமண்டபமும் 1912/13ம் ஆண்டுகளில் தம்ப மண்டபமும் அமைக்கப்பட்டன. இம் மண்டபங்களுக்கான தீராந்தி மரங்கள் திருகோணமலையில் துறைமுகத்திலிருந்து கடல் மார்க்கமாகக் கொண்டு வரப்பட்டன. 1914/16ம் ஆண்டுகாலத்தில் கோபுரவாசல் வைரக்கல் திருப்பணிவேலை, பண்டாரம்–வேலுப்பிள்ளை அவர்களின் தலைமையில் அல்வாய் தெற்கு இறக்கப்பர்–கார்த்திகேசு அவர்களைக் கொண்டு செய்விக்கப்பட்டது. 1917/19ம் ஆண்டுகாலத்தில் பழைய சுற்றுமதிலை அழித்துப் புதிதாகச் சுற்று மதிலும், வெளிவிதியின் தென்மேற்கு முலையில் கிணறும் கட்டப்பட்டன. 1919/21ம் ஆண்டுகாலத்தில் மடைப்பள்ளி, அதற்குரிய கிணறும், களஞ்சியம், வாகனசாலை என்பன கட்டப்பட்டன. 1924ம் ஆண்டில் 640 இறாத்தல் நிறையுடைய கண்டாமணி போதியோடை அம்பலவர்–கந்தப்பர் அவர்களின் முயற்சியினால், சுப்பையா ஆச்சாரி அவர்களைக் கொண்டு வார்ப்பிக்கப்பட்டது. 1925/28ம் ஆண்டுகாலத்தில் மணிக்கோபுர வைரக்கல் திருப்பணிவேலை புண்ணியர்–சின்னத்தம்பி அவர்களின் தலைமையில், மேசன் வயிரவிப்பில்லை அவர்களைக் கொண்டு செய்விக்கப்பட்டது.
1928ம் ஆண்டில் சின்னப்பு–வேலுப்பிள்ளை அவர்களால் கட்டுவிக்கப்பட்ட நாகதம்பிரான் கோவிலில், ஆனி உத்தரத்திருநாளன்று பிரதிட்டையும் நடைபெற்றது. வடக்கு வெளிவீதியின் தென்பக்கத்தில் வைத்து வழிபட்ட சிவ அம்சம் பொருந்திய நாகதம்பிரானும் புதிதாக இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட விஸ்ணு அம்சம் பொருந்திய நாகதம்பிரானும் இக்கோவிலில் முறையே தென்புறமும் வடபுறமும் ஒன்றாய்ப் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன. 1940ம் ஆண்டளவில் வெளிமண்டபமும் கட்டப்பட்டது. 1950ம் ஆண்டில் கோபுரவாசலுக்கு இரும்புக்கேற்றும், 1953ம் ஆண்டில் தேவசபை வெளிவாசலுக்கு இரும்புக்கேற்றும், குளத்தடி மதிலும், அதற்கு இரும்புக்கேற்றும் அமைக்கப்பட்டன.


Leave a Reply