திருகணை

ஈர்க்கினால் பின்னப்பட்ட திருகணை
தமிழர் வாழ்வில் ஒன்றிப்பிணைந்த ஒரு பொருள் தான் திருகணை. பொதுவாக திருகணி என்று சொல்லுவார்கள். பெரும்பாலும் பனை ஈர்க்கினால் பின்னப்பட்டதாக அல்லது தும்புக் கயிற்றினால் பின்னப்பட்டதாக இருக்கும். வீடுகளில் குறிப்பாக சமையல் அறையில் சமைக்கப்பட்ட உணவுப் பாத்திரங்களை வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும். ஆரம்ப காலங்களில் விறகைப் பயன்படுத்தியே எல்லாரும் சமையல் வேலைகளைச் செய்வார்கள். இதன் போது பாத்திரத்தில் புகைக்கரி காணப்படும். நேரடியாக பாத்திரங்களை நிலத்தில் வைத்தால் வெப்பம் மற்றும் கரியால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக அந்த திருகணை பாவிக்கப்படும். பானை, சட்டி, தாச்சி, மற்றும் சமையல் உபகரணங்களை வைப்பதற்காக பாவிக்கப்படும். சமையல் பாத்திரங்களின் அடிப்பகுதி பெரும்பாலும் வளைவாகவே காணப்படும். எனவே நேரடியாக தரையில் வைக்க முடியாது. திருகணை இதற்கு ஒரு நல்ல தீர்வாக அமைந்தது.
யாழ்ப்பாணத்தில் பனை வளம் மிக்கதாக உள்ளது. பனையின் பெரும்பாலான பகுதிகளை நாங்கள் எமது அன்றாட தேவைகளுக்காக பாவிக்கின்றோம். அந்த வகையில் திருகணை செய்யப்பட்டு பாவிக்கப்படுகிறது. இன்றைய நவீன காலத்தில் மின்சாரம் மற்றும் காஸ் போன்ற எரிபொருட்கள் பாவிக்கப்படுகிறது. இதனால் திருகணை பாவனை வெகுவாக குறைந்துள்ளது. எனினும் கிராமப்புறங்களில் இன்றும் அழியாத சொத்தாக திருகணை பாவிக்கப்படுகிறது.
தற்போது வண்ணம் பூசப்பட்ட நார்களில் இழைக்கப்பட்ட திருகணைகளை சந்தைகளில் காணக்கூடியதாக உள்ளது. அடுக்களையில் மட்டும் இல்லாமல் வேறு சில சந்தர்ப்பங்களிலும் திருகணை பாவிக்கப்படுகிறது. குறிப்பாக ஆலய திருவிழா காலங்களில் கற்பூரச்சட்டி எடுக்கும் வழக்கம் சைவ மரபுகளில் காணப்படுகிறது. இதன்போதும் கற்பூரச்சட்டியின் வெப்பம் தலையில் தாக்காமல் இருப்பதற்காக திருகணை பாவிக்கப்படுகிறது.
இதைப்போலத்தான் உறி எம் வாழ்வில் பிரபலமாக இருந்தது. திருகணையுடன் தொங்கவிடக்கூடியவாறு மூன்று இழைகள் இணைக்கப்பட்டு கூரையில் தொங்கவிடக் கூடியவாறு அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் உணவுப் பதார்த்தங்களை சேமிக்கவும் உலர்ந்த உணவுகளை பாதுகாப்பாக களஞ்சியப் படுத்தவும் முடியும்.




Leave a Reply