தாலி தந்த பனை

palmyraகாகிதங்கள் தோன்றாத காலத்தில் எழுத்தறிவைச் சுமந்த ஏடுகள் அறிவின் சின்னம். ஏடு என்ற சொல்லின் வேர் பனை ஓலை அல்லவா? அறிவுப்பசியை பன்னெடுங்காலமாக போக்கிய பனை மரங்களே ஏடுகளின் தாய். பனை மரங்களின் பலன்களை அறியாத மக்களே பாரர்.

கடந்த தலைமுறையில் திருக்குடந்தை அருணாசலப் புலவர் எழுதிய “தால விருட்சம்” பனையின் 801 பயன்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதாக தகவல் உண்டு. “தால விருட்சம்” என்றால் “பனையின் முகவரி” என்று பொருள்.

இன்று தங்கத்தில் தாலி செய்கிறார்கள். மஞ்சள் நாணில் திருமாங்கல்யத்தைக் கோர்த்து கழுத்தில் அணிவது தாலி. பனங்காட்டுப் பண்பாட்டில் பழந்தமிழர்கள் பனை ஓலையில் மணமகள் பெயரை எழுதி, சுருட்டி, துவாரமிட்ட மணமகள் காதில் அணிவார்களாம். அதுதான் தாலி. காதணி விழாவும் கல்யாணமும் ஒன்றாக நிகழ்ந்தன. “தால” என்றால் “இலை” என்று பொருள். பனை ஓலையும் இலைதானே.ஆகவு பனை மரம் தால மரமாயிற்று. தாலி வழங்கிய மங்கல மரமும் அதுதான்.  பழந்தமிழ் மன்னர்களின் குலச்சின்னம் பனை மரம்.

பழந்தமிழர் வாழ்வில் பனை மரமே பணம் தரும் மரம். அன்று கரும்புச் சர்க்கரை தோன்றவில்லை. இனிப்புக்கு இலுப்பைப் பூவும், பனங் கருப்பட்டியுமே பயனாயிற்று. போதைக்கு அன்று சாராயம், கசிப்பு இல்லை. பனங்கள் மற்றுமே பயனாயிற்று. படை வீரர்களுக்கு மன்னர்கள் பனங்கள் வழங்கியதைப் புறநானூறு தெரிவிக்கிறது. கலங்கல் என்பது பனங்கள்.

மன்னர்கள் கலங்கல் வழங்கினராம். மற்றொரு பாடல்

பனை“கள்ளின் வாழ்த்தி கள்ளின் வாழ்த்தி காட்டொடு மிடைத்த சியாமுற்றில்” (புறநானூறு 316) மன்னன் வழங்கிய கலங்கலைக் குடித்து விட்டு படை வீரர்கள் கள்ளை வாழ்த்தினர். பனங்கள் மிகவும் அரிய சித்த ஆயுர்வேத மருந்து என்பதை அறியாத பாமரர்கள் நாங்கள். என்ன சாப்பிட்டாலும் எடை ஏறாமல் பலம் குன்றியவர்கள் கள்ளைக் குடித்து நல்லுணவு உண்டால் பலசாலியாவார்கள். வயதுக்கு ஏற்ற எடை ஏறும். சுவாச கோசம், நீரிழிவு நோய்களுக்கு மருந்து. போதைக்கான வேதியல் கலக்காமல் சுத்தமான கள் மருந்து. சுத்தமான கள்ளில் போதை குறைவு.

மதுபானக் கடைகளில் விற்கப்படும் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் எல்லாம் சுத்தமானவை அல்ல. மொலாசஸ்ஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அல்கஹோலின் அடர்த்தியைக் குறைத்து விஸ்கி, பிராந்தி, ரம் ஆகியவற்றின் நிறம் கெராமல் என்ற சாயத்தினால் பெறப்படுகிறதாம்.

பிராந்தியை திராட்சை ரசத்திலிருந்தும், பார்லி மால்ட்டிலிருந்து விஸ்கி, ஜின்னும் பெறப்பட வேண்டும். இப்போது மக்காச் சோள மால்ட் பயனாகிறது. ரம் மட்டும் கரும்புச் சாறிலிருந்து பெற வேண்டும். மேலை நாடுகளில் சுத்தமான சரக்கு பெற வாய்ப்புண்டு. ஆனால் உள்ளூரில் விற்கப்படும் பலவற்றில் மொலாசஸ் + கெராமல் கலப்புதான்.

இலுப்பைப் பூக்களிலிருந்து பழங்குடி மக்கள் தயாரிக்கும் சாராயம் கூட தீமையளிக்காது. மதுபானங்கள் எல்லாம் நின்று கொல்லும் விசம். அவற்றை விடப் பனங்கள் நூறு மடங்கு உயர்ந்த பானம். சங்க காலத் தமிழர்கள் பனங்கள் பருகி திடமுடன் வாழ்ந்ததால் மனித குல வாழ்வுக்கு பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்று புறநானூறில் 323 ஆவது பாடல் கூறுகிறது.

சங்க காலத் தமிழ் மன்னர்கள் பனை மரங்களை வளர்த்தனர். பனை மர வளர்ப்புக்கு இன்றைய அரசு திட்டமிடவில்லை. பன்னாட்டு நிறுவனங்களை அழைத்து தொழில் முதலீடு செய்யும்படி வற்புறுத்தும் அரசுகள் பனை மரம் வளர்த்தல் போன்ற பல்வேறு குடிசைத் தொழில் வழங்கும் வேலை வாய்ப்புகள் பற்றி கவனம் செலுத்தாதது ஏன்?

பனை நுங்கு அமெரிக்க ஐரோப்பிய சந்தைகளை கவரக்கூடியது. பனை நுங்கு ஜாமை லண்டனில் உண்டதாகக் கூறும் குமரி ஆனந்தன், லண்டனில் பனை நுங்கு 123 இந்திய ரூபாக்கு விற்பதாகத் தெரிவித்தார். தாய்லாந்தில் இருந்து பனம் பழச்சாறு, நுங்கு, நுங்கு ஜாம் ஆகியவை ஐரோப்பிய சந்தையைப் பிடித்துள்ளதாம்.

அப்படிப்பட்ட ஐரோப்பிய சந்தையை நாம் பிடித்து விட்டால் பனை மரம் பண மரமாகுமே! உள்நாட்டிலும் பனை சார்ந்த தொழில்களை வளர்க்கலாமே. பனை வளர்த்துக் கோடையில் மக்களுக்கு நுங்குகளை வழங்கினால், உள்ளம் குளிர்ந்து பனை வளர்த்த தலைவர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பார்களே! பனை தரும் பொருள்களில் ஏழைக்கேற்ற சத்துணவும் உண்டு. அதுவே பனங் கிழங்கு. கிராமங்களில் பெண்கள் பனங்கொட்டைகளை சேகரித்து மண்ணில் நெருக்கமாக நடவு செய்வார்கள். பனங் கொட்டை நட்ட 100 வது நாளிலிருந்து அறுவடை செய்யலாம்.

ஒரு பனம் பழத்தில் ஒன்று முதல் மூன்று விதைகள் இருக்கும். ஒரு பழத்திலிருந்து ஒன்று முதல் மூன்று கிழங்குகள் கிட்டும். ப்பனங் கிழங்குகளை சுட்டுத் தின்னலாம். வேக வைத்தும் உண்ணலாம். பனங்கிழங்கில் புரதச் சத்துடன் நிறைய கல்சியமும், பொஸ்பரசும் உண்டு. இயற்கையான சத்துணவு. 75 சதவீதம் மாவுச் சத்தும் உள்ளதால் நல்ல சக்தியை அளிக்கும்.

தால விலாசம் எழுதிய அருணாசலப்புலவர் பனையை ஓர் அற்புத மூலிகை என்றும் கற்பக விருட்சம் என்றும் வர்ணித்துள்ளார். பனை ஓலை, பனம் பூ, பூத்தண்டு, பதநீர், கள், கருப்பட்டி, பனங்கற்கண்டு, நுங்கு, பழம், பனங்கிழங்கு, பனை வேர் எல்லாமே நாட்டு மருந்துச் சரக்குகள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான குணம் உண்டு.

சங்க காலத் தமிழர்களுக்கு காசநோய் வந்தால் பனங்கள் கொடுத்து குணப்படுத்துவார்களாம். அன்று பனங்கள்ளே “ஸ்ட்ரப்டோமைசின்”.

நூறாண்டு வைரம் பாய்ந்த பனை மரம் தேக்கு. அந்தக் காலத்தில் கொங்கிரீட் வீடுகள் ஏது? வளைவு ஓடுகள் கொண்ட ஓட்டு வீடுகளுக்கு வைரம் பாய்ந்த பனங்கைகள், உத்திரம், தூண்களாக பயனாயிற்று. பனைமரம் கனம் நிரம்பிய உறுதியான மரம். பனை மரங்களை நெருக்கமாக நட்டு உயிர்வேலி எழுப்பிவிட்டால் யானை கூட உள்ளே நுழையாது. காட்டுப் பகுதிகளில் விவசாயம் செய்வோர் பனைமர உயிர்வேலி அமைப்பது நன்று.

பனை மரங்களுக்கு இவ்வளவு பயன்பாடு இருந்தும் நாம் பெற்ற நாகரிகம் பனை மரங்களுக்கு உதவுவதாயில்லை. இது கொங்கிரீட் யுகம். பனை ஓலை வேயப்பட்ட குடிசைகள், ஓட்டு வீடுகள் எல்லாம் காணாமல் போய் விட்டன.

ஏழை மக்களின் ஏராளமான வேலை வழங்கக்கூடிய பனை மரம், அன்று தமிழர்களின் குலச் சின்னமாயிருந்தும் கூட, இன்று பாழ்பட்டது ஏன்.

தொடர்புடைய பதிவுகள்

ஓலைச்சுவடி எழுதப் பயன்படும் தாழிப்பனை

பனையோலை பாய்

வளம்மிகு பனைகள்

கிளை விட்ட பனைமரம்

நீத்துப்பெட்டி

திருகணை

கற்பகதரு

பனங்கொட்டை பொறுக்கி

 

நன்றி – முகுந்தன் ( தகவல் ஆக்கம்)

 

2 reviews on “தாலி தந்த பனை”

  1. கருணா சொல்கின்றார்:

    கருத்துக்கள் அருமை நண்பரே. நல்லதொரு மாற்றம் தேவை. பழந்தமிழர் பெருமைகளையும் திறமைகளையும் மறந்து விட்ட நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது

  2. சுதர்சன் சொல்கின்றார்:

    நன்றி கருணா.