படலை – தொலைக்கப்பட்ட தமிழர் பாரம்பரியம்

படலைகால ஓட்டங்களில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே! யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் சங்கடப் படலை என ஒரு வகையான வெளி வாசல் வேலியில் அமைக்கப்பட்ட முறை ஒன்று இருந்தது. இது ஒரு மறைந்து போகும் பாரம்பரிய அமைப்பு முறையாகும். நடை பயணமாக வரும் வழிப்போக்கர்களுக்குச் சங்கடங்களை தீர்க்கும் முகமாக அவை அமைக்கப்பட்டதால் அவை சங்கடப் படலை என காரணப் பெயர் பெற்றிருக்கலாம்.

அதன் அமைப்பு முறை படலைக்கு நிழல் கொடுக்கும் வகையில் ஒரு கூரை அமைப்பு உயரத்திலும் பாதசாரிகள் இருந்தோ கிடந்தோ இளைப்பாறிப் போகும் வகையில் சீமேந்தினால் அமைக்கப்பட்ட மேடை கீழேயும் அமைந்திருக்கும். அருகில் மண்பானையில் குடி தண்ணீர் வைக்கப்பட்டிருந்தலும் மரபு. சில படலை அமைப்புகள் நிழல் மட்டும் கொடுத்த படி இருப்பதும் இயல்பு. அவை இப்போது வெகுவாக அருகியுள்ள போதும் சில இடங்களில் அவை இன்றும் புழக்கத்தில் இருக்கக் காணலாம்.

ஆரம்ப காலங்களில் சுற்றி அடைக்கப்பட்ட காணிகளில் உள்வரும் பாதைக்கு பாதுகாப்பாக படலை அமைக்கப்பட்டது. இது பனை மட்டையாலோ அல்லது பட்டை உரிக்கப்பட்ட தடிகளை கொண்டோ அல்லது பலகை கொண்டோ உருவாக்கப்பட்டது. திறந்து பூட்டக்கூடிய வகையில் அச்சாணி தடியில் சுழலக்கூடியவாறு அமைக்கப்பட்டது. தற்போது இரும்பு மற்றும் பல்வேறு உலோக வேலைப்பாடுடைய படலை வகைகள் பாவனைக்கு வந்ததால் இவ்வாறான படலைகள் குறிப்பாக சங்கடன்படலை பாவனையில் இருந்து மறைந்துள்ளது.

படலை

நன்றி – தகவல் மூலம் – http://akshayapaathram.blogspot.com இணையம்

2 reviews on “படலை – தொலைக்கப்பட்ட தமிழர் பாரம்பரியம்”

 1. நடேசலிங்கம் சொல்கின்றார்:

  இவை மட்டுமல்ல
  சுமை தூக்கிக்கொண்டு வரும் வழிப்போக்கர்கள் சுமையை இறக்கவும் மீண்டும் தூக்கவும் உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக, படலையின் வெளிப்புறத்தே நிறுத்தி வைத்தாற்போல் கருங் கல்லினாலான சுமைதாங்கி கல் ஒன்று நட்டுவைக்கப்படும்.

  மற்றும்,
  கோடை காலங்களில் உலாவும் கால்நடைகள், பறவைகள் பருகுவதற்கென்றே சிறிய தண்ணிர் தொட்டி ஒன்றும் அமைக்கப்பட்டு நாளாந்தம் தொட்டி நிறைவாக தண்ணீர் நிரவி வைக்கப்படும்.
  நன்றி

 2. சுதர்சன் சொல்கின்றார்:

  நன்றி நடேசலிங்கம் அவர்களே

  சுமைதாங்கி தொடர்பான ஆக்கம் தனியாக எனது இணையத்தில் பதிவுற்றியுள்ளேன். தங்களின் தகவலுக்கு நன்றி.