கயிறு திரித்தல்

“கயிறு திரித்தல் ” என்பது இப்பழங்கதையின் தலைப்பாக இருந்த போதும், பேச்சுவழக்கில் “ கயிறு வைத்தல் ” என்று வழங்கப்பட்டு வருவதையே காண்கிறோம். இந்த இரண்டு சொற் பிரயோகங்களை விட மூன்றாவதாக“ கயிறு விடுதல் ” எனும் சொற்பதமும் பிரபல்யமானது.
அதன் பொருள் அனைவரும் அறிந்ததே. அதனால் நான்“ கயிறு விட ” விரும்பாமல் நேராக விடயத்திற்கே வருகிறேன். பாய்மரக்கப்பல் காலத்திலிருந்தே“ கயிறு திரித்தல் ” ஒரு முக்கிய கைத்தொழிலாக இருந்து வருகிறது. கப்பலில் பாய்களை உயர்த்தத் தேவையான கயிறுகள் முதல் நங்கூரம் இணைப்புக் கயிறுகள் வரை இங்கேயே திரிக்கப்பட்டன.
கயிறு திரிக்கப்பட்ட நீண்ட வீதி
இதற்கான பாய்கள் இந்தியாவிலிருந்தும் கொண்டு வருவார்கள். அந்நாளில் நவிண்டில் பகுதியில் தறியிலும் பாய்கள் நெய்யப்பட்டிருக்கிறது. பாய் தைக்கும் வேலைகள் பிள்ளையார் வீதியிலும் நடைபெற்றிருக்கிறது. அளவாக பாய்களுக்கு வெட்டப்படும் துண்டுகளில் எஞ்சியுள்ள வெட்டுத்துண்டுகள் நூலாக்கப்பட்டு திரியாக்கப்பட்டு சிவன் – அம்மன் – பிள்ளையார் கோவில்களுக்கு வழங்கப்படுவது வழமையாக இருந்திருக்கிறது. சாய்மனைக் கதிரைக்கான இரட்டு, காட்டுக் கட்டிலுக்கான இரட்டுத்தைப்பது போன்றவை கயிறு தைத்தலின் உபதொழில்களாகும்.
கயிறுதிரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் அத்தனையும் சிவன்கோவில் பராமரிப்பில் எப்போதும் உள்ளன. பெற்றுக்கொள்ளும் பொருட்களுக்கு வாடகை கொடுக்கவேண்டும். கயிறு வைப்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒன்றைக்கூட்டி 1 கூலிக்கான பணத்தை வாடகையாகச் செலுத்துவதே வழமையானது.
இந்த உபகரணங்களில் “சாவி” முக்கியமானது. “ ட “ போன்ற இரும்புக்கம்பியில் தலைப்பில் இன்னுமொரு வளைவுகொண்டதே “ சாவி ” எனப்படுவது. மேற்கே, தணிகாசலம் அண்ணையின் வீட்டை நெருக்கியபடி ஒருபக்கத்தில் தடித்த உயிர்ப்பானமரம் உண்டு. சற்றுத்தள்ளி நாட்டப்பட்டிருக்கும் இன்னொரு மரத்திற்கும் இடையே கட்டப்பட்டிருக்கும் துவாரங்கள் உள்ள தடித்த பலகையில் உள்ள துவாரங்களில் “சாவி “ கள் பொருத்தப்பட்டிருக்கும்.
கிழக்கே, உயர்ந்த முக்காலியில் குறுக்குப் பலகை கட்டப்பட்டு அதிலும் சாவிகள் பொருத்தப்பட்டிருக்கும். நிலத்தைத் தழுவி வரும் முக்கோண மூலையில் முறுக்கேறும் கயிறு இழுபடாமல் இருக்க ஒரு“ கல் ” (ஞானப்பாரம்) வைக்கப்பட்டிருக்கும்.
பெரிய தேர் வடங்கள் வைப்பதற்கு ஒருபக்கத்திற்கு 4 பேராக 8 பேர் சாவியைச் சுற்றுவார்கள். இரண்டு பக்கங்களிலும் எல்லாச் சாவிகளின் சுற்றும் சமமாயிருத்தல் வேண்டும். இதற்கு வசதியாக ஒருவர் அல்லது இருவர் பாட, மற்றவர்கள் “ஏலோலோ…….. ஏலோலோ…… ” என்று சொல்வார்கள்.
பாட்டு முடியவும் கயிற்றின் சுற்றும் சரியாக வரும். கயிறு முறுக்கி முடிந்ததும் நாலு பிரியையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே கயிறாக்குவார்கள். கிழக்குத் தொங்கலில் இருந்து அம்பாள் மடப்பள்ளி மூலைவரை, கயிறு முறுகிய இழுவை காரணமாக முக்காலி அரங்கி வரும்.
அந்நாளில் வேம்படி ஒழுங்கையில் வசித்து வந்த வடிவேலு குமாரசாமி என்பவரே பாய்க்கப்பல் காலத்திலிருந்தே கயிறு வைக்கும் இத்தொழிலுக்குத் தலைமை தாங்கி வந்துள்ளார். இவரோடு கூட கோபாலபிள்ளை, அவரது மகன் ஐயாபிள்ளை, ஆனந்தசாமி, கந்தசாமி, ஞானமூர்த்தி, வைரமுத்து, தில்லைநடராசா ஆகியோர் இந்தத் தொழிலில் பிரபல்யமாக இருந்தனர்.
இவர்களில் அநேகர் சிவன்கோவில் தொண்டர்களாக இருந்தவர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.



1965-1967 க்கும் இடைப்பட்ட காலத்தில் நயினை நாகபூசணி அம்மன்கோவில் திருத்தேருக்குத் தேர்வடம் வைக்கும் வேலை, வ. இ. அப்பா தலைமையில் நடந்தேறியது ஒரு முக்கிய விடயமாகப் பேசப்பட்டது.
சிவன்கோவில் ஈசான மூலையின் கிழக்காக இருந்த கந்தப்பர் வளவு வேலியை வெட்டி மிக நீளமான கயிறு வைக்கப்பட்டது. நமது கைகளால் பொத்திப் பிடிக்க முடியாத அளவுக்கு விட்டம் கூடிய அந்தத் தேர்வடம் லொறி மூலம் எடுத்துச் செல்லப்பட்டது இன்னமும் நினைவில் உள்ளது.
வடிவேலு குமாரசாமியின் காலத்தின் பின்னர் அவரது மகன் குமாரசாமி விநாயகசுந்தரம் (தற்போது வித்தனை ஒழுங்கையில் வசிப்பவர்) கயிறு திரிக்கும் தொழிலின் தலையாரியாக உள்ளார். இவரது காலத்தில் சுதுமலை புவனேஸ்வரி அம்மன், வண்ணை நாச்சிமார் கோவில், நீர்வேலி பிள்ளையார் கோவில், தச்சன்தோப்பு பிள்ளையார் கோவில் மற்றும் பல கோவில்களுக்கும் தேர்வடம் செய்தமையை நினைவு கூருகிறார்.
அந்நாளில் பாய்மரக் கப்பல்களின் பயன்பாடுகள் குறையத் தொடங்க கயிறு கப்பல்களின் பயன்பாடுகள் குறையத் தொடங்க கயிறு வைக்கும் தொழிலும் நொந்து போனது. இந்நாளில் கொழும்புக் கயிறு வரத்துக் குறைந்து போய் எல்லோரும் குறுவோன் கயிற்றின் பக்கம் திரும்பிவிட்டதால் தொழில் வாய்ப்பு மிகக் குறைந்து போய்விட்டதாக விநாயகசுந்தரம் பெரிதும் கவலைப்பட்டுக் கூறுகிறார்.
இருந்தாலும், குறுவோன் 5 மில் கயிறு நான்கினை ஒன்றாக்கித் தடிப்பான கயிறாகத் திரிக்கும் வேலைகள் இடைக்கிடை கிட்டுவதாகக் கூறுகிறார்.
எது எப்படியிருந்த போதிலும் ஒருகாலத்தில் ஊரின் பிரபலமான“ கயிறு திரித்தல் ” தொழில் வருங்காலத்தில் மங்கி மறைந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.
ஆனாலும் கயிறு திரிக்கும் உபகரணங்கள் எந்நேரமும் பயன்படுத்தக் கூடியதாக சிவன் கோவில் வசந்த மண்டபத்தின் வடகிழக்கு மூலைக் கொட்டகையில் இன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.
நன்றி – ஆக்கம் – அப்பாத்துரை மாஸ்ரர் (வல்வையூர் அப்பண்ணா)
தகவல் மூலம் –valvettithurai.org இணையம்
Leave a Reply