வன்னிமை விவசாயச் சடங்கு முறை

வன்னிமை விவசாயச் சடங்கு முறை பற்றி ஆராயும் போது ஈழத்து வன்னிமைகள் இயற்கை வளம் கொளிப்பவை, ஐவகை நிலங்களுள் முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களையும் பெரிதும் தன்னுட்கொண்டது. இயற்கையின் நிலப்பயன்பாடு மாறாத காலநிலைத்தன்மையும் வன்னிமைகளை வளமிக்க பிரதேசங்களாக ஆக்கிற்று. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவெனில் ஆகிய தமிழ் மக்களின் காலநிலைப் பாகுபாடு இங்கு ஒழுங்காகச் செயல்பட்டு வந்தன. மக்களும் அவ்வக் காலநிலைகளுக்கு ஏற்ப தொழில் முறைகளைக் கையாண்டு வந்தனர்.
வன்னிமைகளின் நான்கு நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் தத்தமக்கென தனியானதோர் தொழில் முறைகைளப் பெற்றிருந்த பொழுதும், சிறப்பாக, இம்மக்கள் யாவரும் விவசாயத்தை விரும்பி வெறுப்பின்றி மேற்கொண்டனர். சமூக ஏற்றத்தாழ்வுகள் இப்பிரதேசங்களில் பெரிதும் பாராட்டப்படாதது போன்றே சமுதாயத்தில் எல்லா மக்களும் நிலத்தினை உடைமைகளாகப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். இங்கு வசதி படைத்தோர் பெரும் நிலக்கிளார்களாக விளங்கினர். ஆனால் அவர்களின் நிலப்பரப்பின் தொகை மேலைத்தேச நிலப்பிரபுக்களின் நிலங்களின் எல்லைகளோடு ஒப்பிடக்கூடியனவல்ல. இவர்கள் சொற்ப நிலப்பரப்பை உடையவர்களாக இருந்த பொழுதும், அதிகார எல்லையும் மனநோக்கும் மேலைத்தேசப்பிரபுத்துவ சமுதாய நோக்கடையனவாகவே இருந்தன. ஆனால் மேலைத்தேசப் பிரபுத்துவ சமுதாயத்தில் இருந்த செல்வவளமும் ஆதிக்கமும் சுரண்டலும் பெரிதும் இவர்களிடத்தில் இருக்கவில்லை என்றே கூறுதல் வேண்டும்.
வன்னிப் பிரதேசம் வட கீழ்ப்பருவப் பெயர்ச்சிக் காற்றினால் மழையைப் பெறுகின்றது. இது வருடமொன்றுக்குச் சராசரி 75 அங்குலம் மழை வீழ்ச்சியைப் பெறும் பகுதியாக விளங்குகின்றது. ஆனாலும் மேற்காவூகை மழை மூலம் அவ்வப்போது மழைவீழ்ச்சியினைப் பெற்றுக் கொள்கின்றது. வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்று ஆரம்பிப்பதற்கு முன்பாக ஆடி மாதத்தில் ஒருசிறிய மழை வீழ்ச்சியினை யாழ்ப்பாணக் குடாநாடு பெறும் பொழுது இப்பிரதேசமும் பெறுகின்றது. “ஆடிப்புழுதிதேடிஉழு” என்பது விவசாயிகள் மரபு. எனவே இக்கால கட்டத்தில் இருவேறு நோக்குடையவர்களாக வன்னி மக்கள் காணப்படுவர். பொதுவாக வன்னிப் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகள் (1) காலபோகம் (2) சிறுபோகம் என்ற இரண்டின் அடிப்படையாக நடைபெறுகின்றது. காலபோகம் மழைவீழ்ச்சியினை அடிப்படையாகக் கொண்டது. சிறுபோகம் நீர்ப்பாசனக் குளங்களை மையமாக கொண்டு நடைபெறுவது குறிப்பாகக் காலபோகம் “வானம்பார்த்தவெள்ளாமை” என்ற மரபு வழிக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு வன்னியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இயல்பு.
மழை பெய்ததும் விவசாயிகள் விதைப்புக்கான அடுக்குகளை ஆயத்தஞ் செய்வர். நெல், கடிகம், விதைப்பெட்டி, மாடு, ஏர் முதலான அடுக்குகளுடன் உழவுக்காரர்களுக்கும் சொல்லி வைப்பர். நெல்லை தெரிவு செய்யும் பொழுது இரண்டரை மாதம் முதல் ஆறுமாதம் வரை நன்று விளையக்கூடிய நெல்வகைகளையும், கூடிய பலனைத் தரவல்ல நெல் இனங்களையும் குறுகிய காலத்தில் அறுவடை செய்யக்கூடிய நெல் வகைகளையும் தெரிவு செய்வர். காலபோகத்தின்
குலவாழை, வெள்ளை நெல்லு, கறுத்த இளங்கலையன், வெள்ளை இளங்கலையன், சீனட்டி பச்சைப்பெருமாள், வெள்ளை சீனட்டி
முதலான நெல் வகைகளைத் தெரிந்தெடுப்பர். சிறுபோகத்தின் போது
சரனி, காடைக்கழுத்தன், அழகிய வண்ணன் கலியன், சிறுவெள்ளை முப்பன்கண், சவரக்குரன், வட்டுப்பித்தன், கருன்குறு வலி, சோறிக்குறும்பை, முருங்கன், மணல்வாரி, மலையழகன், கார்நெல்லு, முல்லைநெல், அடுக்கு வெள்ளை
முதலான நெல்வகைகளைத் தெரிவு செய்வர்.
ஈழநாட்டின் தமிழர் சமுதாய மரபில் ஒவ்வோர் சமூகமும் தமக்குள்ள கடமைகளைச் செய்ய வேண்டிய கடமைப்பாடு இருந்தது. இவ்வழமை வன்னிமைப் பிரதேசங்களில் ஓரளவ பின்பற்றப்பட்டு வந்ததெனலாம். விவசாயிகளுக்கு அவ்வகையில் ஏரினைத் தச்சுத் தொழிலாளி செய்து கொடுத்து வந்தான். ஏர், பாலை, முதிரை மரங்களை உபயோகித்தும் நுகம், மஞ்சவண்ணா, ஆத்தி முதலான மரங்களை உபயோகித்தும் செய்யப்பட்டது. யாழ்ப்பாண குடாநாட்டின் ஏர் வகைகளுக்கும் வன்னியில் உபயோகிக்கும் ஏர்வகைகளுக்கும் வேறுபாடு இருக்கவில்லை. ஆனால் சிங்கள மக்கள் உபயோகிக்கும் ஏர் வகைகளுக்கும் வன்னிப்பிரதேச மக்களின் ஏர் வகைகளுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. சிங்கள மக்கள் உபயோகிக்கும் ஏர் கனதியானதும் பெரியதுமானதுமாகவுள்ளது. வன்னியில் எருமைமாட்டைப் பயன்படுத்தி உழும் பொழுது அதன் கலப்பை சாதாரண மாடுகளின் இயற்கை உழப்பட வேண்டிய நிலத்தின் ஆழம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகிறது. மழை பெய்ய ஆரம்பித்ததும் ஒவ்வொரு கமக்காரனும் தனது வயலிலே மாட்டை இறக்கி உழுவதற்கு சுபவேளையினைப் பார்த்துக் கொள்வான். பொதுவாக அட்டமி, நவமி, கரிநாள், இராகுகாலம், பஞ்சமி முதலான நாட்களைத் தவிர்த்து அமிர்தயோகம், சத்தியோகம் முதலான சுபவேளையில் மாடுகளையூம் சலப்பைகளையும் கொண்டு செல்வர். சுபமூர்த்தம் பார்த்தலைப் பஞ்சாங்கம் பார்த்தல் என்று அழைப்பர். வயலுக்குச் செல்லும் பொழுது ஒரு பெட்டியிற் கற்பூரம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய பொருட்களைக் கொண்டு செல்வர். அங்கு கமக்காரன் தலைப்பாகை கட்டி, வீபூதி சாத்தி, கிழக்கு முகமாக நின்று கொண்டு இப்பண்டங்களை முன்னே வைத்து கற்பூரம் கொழுத்தி தேங்காய் உடைத்துச் சூரியனைக் கும்பிட்டுத் தனது வயலும் நாடும் நல் விளைச்சல் பெற, நற்கதி அருள வேண்டி நிற்பான். பின்னர் பூட்டப்பட்ட ஏரினை வாங்கி உழுவை தொடக்கி வைப்பான். இதனைத் தொடர்ந்து ஏனைய மாடுகள் பின் செல்லும். இத்தகைய வைபவம் கூட்டாக முயற்சி மேற்கொள்ளப்படும் பொழுதும் பண்ணையாரின் கீழ் முயற்சி மேற்கொள்ளப்படுவதே வழமையாகும். தனிமனிதனும் சூரியனை வேண்டியே விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றான்.
சூரியனை வேண்டுதலுடன் மிக நம்பிக்கைகளும் பெரும் விளைவினைத் தருமென நம்புகின்றனர்.
ஏரின் படவாழ் பாலை மரத்தினாற் செய்யப் பெற்றதாய், மொழி பங்கிராய்யினாலானதாய், கிட்டி பண்ணை மரத்தினாதாய், நுகம் புன்னை மரங்கொண்டதாய், களக்கட்டை சார மரத்தினதாய், வேலைக்காரன் தடி காஞ்சுரம் மரத்தினதாய், இருப்பதோடு நத்தை பலித்தோலினதாய் முட்டான் கயிறு பொன்னாலதாய், இவற்றுக்கு மேலதாய் மாடுகள் மாமனும் மருமகனுமாய் என்ற உறவினை உடையனவாக இருத்தல் வேண்டும் என்று நம்பினர்.
இத்தகைய சிறப்பியல்புகளை உடையவற்றை வயல் நிலத்திலே இறக்கி ஏர்பூட்டி உழுவதன் மூலம் பெரும் பயனை எதிர்பார்த்தனர். இவற்றை முழுமையாக எல்லா ஏர்களுக்கும் பயன்படுத்த முடியாத பொழுதிலும் சில பண்ணையாளர்கள் முறைக்காக இத்தகைய ஒழுங்கு முறைக்கமைந்த விதிகளைக் கடைப்பிடிக்கவே செய்தனர் இதனை வன்னி மக்கள் ஒரு வாய்ப்பாட்டாக பின்வருமாறு உரைப்பர்.
பாலை பட வாழ்
பங்கிராய் மொழி
பண்ணை கிட்டி
புன்னை நுகம்
காரை கணக்கட்டை
காஞ்சூழ் வேலையாள்
பொன் முட்டான் கயிறு
புலித்தோல் நத்தை
மாமனும் மருமகனும்
யாழ்ப்பாண விவசாய மக்கள் மத்தியிலும் இத்தகையதோர் நம்பிக்கை உண்டு. ஆனால் உபயோகப்படுத்தப்படும் பொருட்களில் சில வேறுபாடுகள் உண்டு. அவை பிரதேச இயற்கை வளங்களுக்கேற்ப மாறுபட்டு அமைகின்றது. பண்ணையான் தான் உழவை ஆரம்பித்து வைக்கும் பொழுது இவ்வொழுங்கிற்கமைந்த ஏரினையே பிடித்து உழ ஆரம்பித்து வைப்பார். பின் அவற்றைக் கொண்டு சென்று விடுவான். இவற்றை ஒரு பெரும் பண்ணையாளனாற் செய்ய முடிந்தது. தவிர ஒரு சாதாரண வன்னி விவசாயியாற் செய்ய முடியவில்லை. நம்பிக்கையின் சின்னமாக இவற்றை பண்ணையாளன் வருடந்தோறும் கடைப்பிடித்தே வந்தான்.
வன்னிமைகளில் இருவகை முறையில் நெறிபயிர் செய்கை பண்ணப்படுகின்றது. 1. புழுதிவிதைப்பு, 2. பலகைஅடிப்பு. புழுதி விதைப்பென்பது நிலையெடுப்புடன் பலமுறை நிலத்தை மறுத்து உழுது விதைப்பதாகும். பலகை அடிப்பென்பது வயல் நிலங்களை புழுதியில் உழுதும் தண்ணீர் விட்டுக் கட்டியும் பலமுறை உழுது கலக்கி பலகை கொண்டு தடவி விதைப்பதாகும். இப்பலகை வள்ளக்கைக் கொண்டு அமைந்திருக்கும். பூவரசு, தவிட்டை, விண்ணாங்கு முதலான மரங்களால் இவற்றை உருவாக்குவார்கள். விதைக்கும் பொழுது செவ்வாய் தவிர்ந்த ஏனைய நாட்களில் உள்ள சுபதினத்திலே விதைப்பு ஆரம்பிப்பார்கள். செவ்வாய்கிழமை விதைப்புக்குகந்த நாளல்ல என்பது இவர்களின் நம்பிக்கை. இதனாற் போலும் “செவ்வாயில்வித்தும்புதனில்அருவியம்ஒவ்வாதவன்செயல்” என்னும் முதுமொழி மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. நெல் விதைத்து அறுவடை செய்யும் காலம் வரையுள்ள காலப்பகுதியில் நெல்லின் வளர்ச்சிப்பருவங்களைக்
குருத்து, பூ, கம்பி, குடலை, காய்நெல்லு, பெரும்பழுப்பு, தாய்நெல்லு, தலைசாய்தல், பழுத்தல்
என அழைப்பர்.
நெல் பயிராக இருக்கும் காலங்களில் காலநிலை மாற்றங்களும் பூச்சி, புழு முதலான ஐந்துக்களின் தாக்கமும் பயிரின் வளர்ச்சியினைத் தடைசெய்து விடுகின்றன. காலநிலை மாற்றங்களுக்கு மனிதன் கட்டுப்பட்டதனால் அதை அவனால் வெல்லுதல் முடியாது. இந்நிலையில் மனிதனுக்குப் பொறுமையும் உறுதியும் கொண்டு இறைவனை வேண்டுதலே வழி தவிர பயிர்களை காலநிலை மாற்றங்களில் நின்று காப்பாற்ற வேறு வழிகள் இல்லை. ஆனால் பயிரைத் தாக்கும் குத்துப்புழு, மடிச்சுக்கட்டி, கொப்புப்புழு, குலைஈச்சன், கூழைவாயன், குறுங்களுத்தன், தத்துவெட்டியான், வேர்க்கறையான், முதலான புழுக்கறையூம் எலிகளையூம் கட்டுப்படுத்த வன்னி மக்கள் பல வழி முறைகளைக் கையாண்டனர். அவற்றிலே குறிப்பிடத்தக்கன.
1) பெருந்தெய்வங்களுக்கோ காவற் தெய்வங்களுக்கோ நேர்தல்,
2) வயற் காவற்தெய்வத்திற்குப் பொங்கித் தெளித்தல்,
3) பூசாரியைக் கொண்டோ மந்திரித்துத் தெளித்தல் என்பனவாகும்.
நேர்த்திகளை நெல் அறுவடையின் பின் செய்து முடிப்பர். நோய் தீவிரமாக பரவுங் காலத்தில் காவற் தெய்வங்களுக்குப் பொங்கித் தெளிப்பர். வயல் நிலங்களின் காவல் தெய்வமாக விநாயகர் விளங்குகிறார். மற்றும் சந்நியாசி, அண்ணமார், முதலான தெய்வங்களும் வயல் நில காவல் தெய்வங்களேயாகும். வயல் நிலங்களில் நோய் காணப்படும் பொழுது அவ்வயல் நிலங்களுக்கு உட்பட்ட கமக்காரர்கள் அனைவரையும் அழைத்து ஒருநாளைக் குறிப்பிட்டுப் பொங்கல் நடத்துவர். பொங்கலின் போது மீட்ட பாலினைத் தனியே எடுத்து வைத்திருப்பர். பொங்கல் முடிந்ததும் ஒருவர் மீட்ட பாலைச்சட்டியுடன் அப்படியே தூக்கி ஒரு கண்டாயத்தில் இருந்து புறப்பட்டு நான்கெல்லையும் தெளித்துக் கடைசிக் கண்டாயத்தால் சட்டியை அவ்விடத்திலே கவிழ்த்து விட்டு, விட்டுப் பாராது புறப்படுவார். மூன்று அல்லது நான்கு நாட்கள் சென்றதும் அவர் புறப்பட்ட கண்டாயத்தால் திரும்பப் புறப்படாமல் பிறிதோர் கண்டாயத்தால் சென்று பார்க்கும் பொழுது ஒரு புழுக்களும் ஐந்துக்களும் இருக்க மாட்டாதென நம்பினர். நம்புகின்றனர். மீட்ட பால் தெளிக்கும் பொழுது குலதெய்வமே இக்கொடிய பூச்சி புழு முதலான ஐந்துக்களில் நின்று பயிர்களுக்கு நோய்வராது காத்தருள்வாயென வேண்டிக்கொள்வர்.
மந்திரித்தல் என்பது மந்திரத்தை நீரில் ஒதிக் கொடுத்தலாகும். இதனை கமக்காரன் செய்வதில்லை. ஆலயங்களில் பூசாரியார் ஓதிக் கொடுத்தகையோ ஆலய விழாக்களின் பொழுது பூசாரியார் ஓதிக் கொடுத்ததையோ கொண்டு சென்று தெளிப்பர். சில சமயங்களில் மந்திரவாதிகளைக் கொண்டு மந்திரித்துக் தெளிப்பதன் மூலம் பூச்சி புழுக்களை இல்லாமல் செய்யலாம் என்றும் நம்புகின்றனர். பூசாரியோ மந்திரவாதியோ பின்வரும் மந்திரங்களை உச்சாடனம் செய்து மந்திரித்துக் கொடுக்கும் பொழுது பூச்சி புழுக்களும் எலிகளும் மறைந்து விடுகின்றன என நம்புவர் வன்னி மக்கள் பூச்சி புழுக்களை இல்லாமல் செய்வதற்கு
ஓம் விலும்லோகம் விட்டுணுலோகம் நாகலோகம் சந்திரலோகம்
தேவலோகத்துக்குட்பட்ட புழுக்கள் எல்லாவற்றுக்கும் தம்பிரானிடத்தே
சென்று தம்பிரானருளிச் செய்த படியால் கள்ளி வனத்துட்
சென்று கள்ளி வெட்டிச் சுட்டுப்போடச் சொன்ன படியால் நானும்
வாயிலே நெருப்பும் அக்குமாலையுமாய் நின்றேன். குத்துப்புழு மடிச்சுக்கட்டி,
கொப்புப்புழு, குழைச்சான் கூழைவாயன், குறுங்கழுத்தன்
வில்லூன்றி வேர்க்கறையன், கந்தப்புழு, தத்துவெட்டியன் எப்பெயர்பட்ட
புழுக்களெல்லாம் இப்புனம் விட்டு அப்புனம் போகவே சிவாகா
என்ற மந்திரத்தை ஓதிக் கொடுப்பவர் எலிகளின் பாதிப்பினின்றும் வயல்களைப் பாதுகாப்பதற்கு பின்வரும் மந்திரங்களை ஓதுவர்.
1. ஓம் எலியனார் பிள்ளை பலியனார் வாரார் புணையனார் காவல் எலிகளெல்லாம் கட்டி அப்புறம் போகவே சிவாகா!
2. ஓம் எலியனார் பிள்ளை அனையானார் காவல் எலி நெற்புலம் விட்டு புறப்புலம் போகவே சிவாகா!
3. ஓம் எரியனார் பிள்ளை பலியனார் வாரார் புலையனார் காவல் எலி இப்புலம் விட்டு புறப்புலம் போகவே சிவாகா!
4. ஓம் இந்திரபுரத்தில் எலிப்புலி வாரார் எலிப்புலம் விட்டு அப்புறம் போகவே சிவாகா!
இத்தகைய மந்திரங்கள் வன்னிமை மக்களாலும் பொதுவாக ஈழத்துத்தமிழ் மக்கள் வாழும் பிரதேச மெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் (மந்திரம் தெரிந்தோர்) ஓதப்பெற்று வருவதாக அறிய முடிகின்றது.
புதிர் எடுத்தல்
ஆவணி முதல் ஐப்பசி வரையுள்ள காலப்பகுதியில் விதைக்கப்பட்ட நெல் தை பிறந்ததும் அறுவடைக்கு உட்படுத்தப்படும். அறுவடைக்கு முன்பாக புதிர் எடுக்கும் சடங்கு நடைபெறும். இச்சடங்கு அன்றும் இன்றும் சிறப்பாகவே நடைபெற்று வருகின்றது. நல்ல சுபதினத்தில் இக்கருமத்தை நடத்துவர். இம்மக்களிடத்தில் “வியாழன்அறுப்பும்வெள்ளிஅடிப்பும்” என்ற பழமொழி வழக்கில் உண்டு. அதற்கிணங்க பெரிதும் வியாழக் கிழமையிலேயே இச்சடங்கினை நடத்த முற்படுவர்.
புதிர் எடுக்கச் செல்வதற்கு முன்பாக தமது உறவினர் சிலருக்கு புதிர் காய்ச்சப்போகிறோம் என்பது பற்றி அறிவிப்பர். புதிர் எடுக்கப்போகும் போது புதிய பெட்டி தாழ்க்கத்தி கற்பூரம் தேங்காய், வாழைப்பழம் என்பவற்றை எடுத்துப் பெட்டியினுள் வைத்து வெள்ளைத் துணியினால் மூடிச்செல்வர். வயலில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்துக் கிழக்கு முகமாக நின்று கற்பூரம் கொழுத்தி தேங்காய் உடைத்து நன்கு முற்றிய அருவியைப் பார்த்து உட்பட்டிகளாக வெட்டிக் கொண்டு வருவார்கள். புதிர் எடுப்பதற்கு விடிய முன்னரே சென்று விடுவார்கள். பிறரின் கண்ணூறு படக்கூடாதென்பதே இதன் நோக்கமாகும். வயலில் இருந்து பதிரைக் கொண்டு வரும் பொழுது வீட்டினுள்ளோரும் உறவினரும் மாவிலைத் தோரணம் கட்டி பிள்ளையார் பிடித்து கும்பம் வைத்து குத்துவிளக்குக் கொழுத்தி வரவேற்பர். புதிரை கும்பத்தின் முன் வைத்து வணங்கிய பின்னர் அதிற் சிறு பகுதியை எடுத்து வீட்டின் தலைவாலின் முன்போ நடுவீட்டிலோ வட்டமாகக் கட்டித் தூக்கி விடுவர். மறுபகுதியை புதிர் காய்ச்சுவதற்காக எடுத்துக் கொள்வர். பதிரைத்தட்டிக் கசக்கி நெல்லாக்கி, மாவிலை கட்டி உரலில் போட்டி இடித்து அரிசியாக்கி அதைப் புதுப்பானையில் பால் சர்க்கரை முதலியவற்றுடன் கலந்து பொங்கி வீட்டினுள்ளே படைப்பர். படைக்கும் பொழுது தமது முன்னோர்களுக்கு ஒரு படைப்பு, வீட்டிற்காக ஒருபடைப்பு, வயற் தெய்வத்திற்காக ஒரு படைப்பு, என மூன்று படைப்புக்கள் படைப்பர். சில சமயங்களில் எல்லாவற்றிற்கும் பொதுவாக ஒரு படைப்பை படைப்பர். படைப்பை வயதில் முதிர்ந்த ஆண் கமக்காரர் நடத்துவர். படையலில் தயிர், நெய், பழவகைகள் யாவும் வைக்கப்படும். படைப்பன் திருமுறைகளை ஓதி படைப்பினை முடிப்பர். பின்னர் அவற்றில் ஒரு படைப்பினை எடுத்து படைப்பிலே படைக்கப்பட்ட எல்லாவற்றையும் ஒன்றாகப் பிசைந்து குழைத்து வீட்டினுள்ள முதியவருக்கு முதற் குழையலைக் கொடுப்பர். அவரும் தம் முன்னோர்களையும் இறைவனையும் நினைத்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கிய வண்ணம் நின்று மிகுந்த பக்தியுடன் வாங்கிக் கொள்வார். பின்னர் படிப்படியாக ஒவ்வொருவராக எல்லோருக்கும் கொடுத்து உண்டு மகிழ்வர்.
வீட்டிற்கு விலக்காக (துடக்கு) இருக்கும் காலங்களில் புதிர் காய்ச்சுதலை ஆலயங்களிலே நடத்துவர். உடனடித் தேவைக்கு நெல் தேவைப்பட்டால் முறைப்படி புதிரை எடுத்து வந்து கும்பத்தில் வைத்து கசக்கி கழுவிய பின் அந்நெல்லினைப் பாலில் போட்டு கலந்து குடிப்பதன் மூலம் புதிரை முடித்துக் கொள்வர்.
பரத்தை வெட்டு
தை பிறந்ததும் வன்னியில் அறுவடை ஆரம்பிக்கும் பெரும் கமக்காரன் தனது வயலில் அறுவடையை ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்தவுடன் தனது கிராமத்திலோ அயற்கிராமத்திலோ உள்ள முதியவரிடம் ஏழு வெற்றிலை ஏழு பாக்கு, ஏழு வாழைப்பழம் ஆகியவற்றைக் கொண்டு சென்று கொடுத்துப் பணிந்து தனது பயிர் விளைந்து விட்டது பரத்தை வெட்ட வேண்டும் என்று குறிப்பிட்டு அதற்கான சுப வேளையையூம் குறித்துச் சொல்லி விட்டுத் தமது இருப்பிடம் செல்வார். பின்னர் முதியவர் அயலவரை அழைத்து விடயத்தை விளக்கிக் குறிப்பிட்டு கமக்காரன் வயலிற் சென்று நெல்லை வெட்ட ஆரம்பிப்பார். எல்லோரும் பாடிக்கொண்டே வெட்டுவார்கள். ஒருவர் மேளம் (மத்தளம்) அடிப்பார். வெட்டுவோர் பாட்டின் ஓசைத்தருவின் விறுவிறுப்புக்கேற்பவும் மிகுந்த விரைவாகவும் அமைதியாக களைப்பின்றி அருவியினை வெட்டி உப்பட்டிகளாக அடுக்கடுக்காக வெட்டிப் போட்டு கொண்டு செல்வர். இதனை பரத்தை போடுதல் என்பர். பாட்டுக்களின் போது பின்வரும் தருக்கள் மேலோங்கி நிற்கும்.
1) தெந்தென்னான தென தென்னான
தென தென்னான தென தெனா
2) தெந் தென தென்ன தென தென தென்ன
தென தெனத் தென்னத் தென்ன
அரிவியை வெட்ட ஆரம்பிக்கும் பொழுது பிள்ளையார் சிந்தினைப் பாட ஆரம்பிப்பார். காலை உணவு வரை சிவபெருமான்சிந்து, குவிப்பள்ளு, பண்டிப்பள்ளு ஆகியவற்றைப் படிப்பர். காலை உணவூ மதியபோசனம் வரை ஐயனார் சிந்து, முருகன் சிந்து, நாகதம்பிரான் சிந்து, வன்னித்தெய்வச் சிந்து, அம்மன் சிந்து, விறுமன் சிந்து, வீரபத்திரன் சிந்து, வதனார்மார் சிந்து முதலானவற்றைப் படிப்பர். மதிய போசனத்தில் இருந்து மாலை வரை கதிரை மலைப் பள்ளுப்படித்து முடிப்பர்.
வயலில் அரிவி வெட்டுங் காலத்தில் கமக்காரன் வயலில் வெட்டுவோருக்கு எதிர்நோக்கி வருவாரானால், உப்பட்டியை அவர் முன்போட்டு மறித்து இடைமறித்து குற்றத்தை அவர் மேற் சுமத்தி, எல்லோரும் சூழ்ந்து அவர் செய்த குற்றத்திற்காக சில வேண்டுதலைச் செய்ய வேண்டு மெனக் கேட்டுக்கொள்வர். அதற்கு கமக்காரன் உடன்படவில்லையெனில் வெட்டு அப்படியே நின்று விடும். உடன்பட்டதும் வெட்டு தொடர்ந்து நடைபெறும். வெட்டி சூடு வைத்து முடிந்ததும் கமக்காரனுக்கு தலைப்பாவை கட்டி வழிநெடுக குழல் ஊதி அவ்வீட்டிற்கு அழைத்துச் செல்வர். அங்கு நிறைகடம் வைத்து, குத்துவிளக்குக் கொழுத்தி பல்வோரும் வாழ்த்தி வரவேற்பர். பின்னர் கமக்காரன் பரத்தை வெட்டுவோரின் வேண்டுதலை அங்கு நிறைவேற்றி வைப்பான். பின் யாவரும் விருந்துண்டு புறப்பட்டுச் செல்வர்.
சூடு வைக்கப்படும் இடம் களம் எனப்படும். கூடுகளத்தில் மேற்குத் திசையாகவும் தெற்குத் திசையாகவும் வைப்பர். ஏனெனில் மேற்கே வைத்த சூட்டினை வடக்கே சரித்து அடிப்பதற்கும் வாய்ப்பாகவும் இருக்கும் என்பதாலாகும். சூடு எப்பொழுதும் கிழக்குப்பக்கமாகவும் வடக்குப் பக்கமாகவும் தள்ளி அடிக்கப்பட வேண்டுமென்பது அவர்களது நம்பிக்கை, இந்நவீன யுகத்தில் இந்நம்பிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சூடு அடிப்பதற்கு முன்பாக சூட்டுக்களத்தினை ஞாயிறு வியாழன் தவிர்ந்த ஏனைய நாட்களில் நன்கு செதுக்கி சாணம் கொண்டு மெழுகுவார்கள். களம் எப்பொழுதும் வட்ட வடிவினதாகவே அமைக்கப்படும். முன்பு குறிப்பிட்டது போல “வியாழன்அறுப்புவெள்ளிஅடிப்பு” என்பதற்கிணங்க வெள்ளிக்கிழமை வரும் சுபவேளையிலும் செவ்வாய், அமாவாசை, கரிநாள், அட்டமி முதலான நாட்களைத் தவிர்த்தும் சூடு போடுவார்கள். சூடு போடுவதற்கு முன்பாக ஆட்களையும் சாக்கு, சுழகு, மண்வெட்டி, கடகம், வேலைக்காரன்தடி, மாடு, தேங்காய், கற்பூரம், தண்ணீர் முதலான பொருட்களையும் ஒழுங்கு செய்வர். இதனை ஒழுங்கு செய்தல் அல்லது ஆயத்தம் செய்தல் என்று அழைப்பர். கேட்டி, களந்தட்ட ஆகிய பொருட்களை வயலின் சுற்றுப்புறக் காடுகளில் வெட்டிக் கொள்வர். இத்தகைய பொருட்கள் களத்துக்குக் கொண்டு சென்றதும் சில நம்பிக்கையின் பேரில் சிறப்பான குழு உக்குறிச்சொற்கள் கொண்டு வழங்குவர். இத்தகைய சொற்கள் மட்டக்களப்பு மக்களின் சமுதாய மரபிலும் வன்னி மக்களின் சமுதாயமரபிலும் ஒன்றிணைந்தும் மாறுபட்டும் காணப்படுகின்றது. சொற்கள் மாறுபட்டாலும் அவை உணர்த்தும் பொருள் மரபுகளும் நம்பிக்கைகளும் ஒரே அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டனவாகவே அமைகின்றன. சூடு அடி காலத்தில் பெண்கள் களத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
சூடு அடிக்கும் களம் வட்டம் வடிவினதாய் பல அளவுத்திட்டங்களுக்கு உட்பட்டதாய் அமைந்திருக்கும். அளவுத்திட்டம் சூட்டின் அளவிற்கு மாறுபட்டு அமையும். சுமார் 10-15 அடிவரை அதன் விட்டம் அமைந்திருக்கும் களத்தின் நடுவே இரண்டு தொடக்கம் இரண்டரை அடி ஆழத்திற்கு களக்கட்டை நடுவதற்கு கிடங்கொன்று தோண்டி வைத்திருப்பர். சூட்டுக் களத்திற்கு அடுக்குகளைக் கொண்டு சென்றதும் தேவகணங்களை அமைதிப்படுத்துவதற்காக சிறுபொங்கல், படையல் ஆகிய சடங்குகளை நடத்துவர். இச்சடங்குகளைச் சரியாக முடிக்காவிட்டால் இத்தேவ கணங்கள் பொலிகளைக் கொண்டு சென்று விடும் என்பது இவர்களது நம்பிக்கை. பிள்ளையாருக்குப் பொங்கலும் ஐயனாருக்கு மடையும் போடுவார்கள். நரசிம்மன் சந்நியாசி, காளி, வன்னியர் முதலான தெய்வங்களுக்குப் பத்திரிக்குழை, தேங்காய், வாழைப்பழம், சாராயம், பொரியல் முதலான பொருட்களை வைத்து வழிபடுவர். பிற்பாடு பிள்ளையார் பொங்களில் மீட்ட பாலினைக் கொண்டு வந்து களக்கட்டைக் கிடங்கினுள் விட்டு, களக்கட்டைக்கு விபூதி, சந்தனம் சாத்திக் கட்டையினை நடுவர். பின்னர் கமக்காரன் களத்திற்கு வந்து கிழக்கு முகமாக நின்று, கற்பூரம் கொழுத்தி, தேங்காய் உடைத்து வேலைக்காரன் தடியால் மேற்கு வடமேற்குப் பக்கமுள்ள சூட்டிலிருந்து நெல்லை எடுத்து “பொழிதாயேபொழி” பொழிதாயேபொழி” என்று சொல்லியும் அல்லது மட்டக்களப்பு மணற் கும்பல் போலே வாரி பொழிதாயே பொழி என்று சொல்லிக் கிழக்கு அல்லது வடக்குத் திசை நோக்கிக் களத்தின் நடுவில் மூன்று முறை அடிப்பர். இவ்வாறு மூன்று முறை கமக்காரன் அடித்ததும் எல்லோரும் சேர்ந்து சூட்டினை அள்ளி களத்திற் போடுவார்கள். சூடு தள்ளும் போது வலது பக்கமாகத் தள்ளியே அடிப்பர். சூட்டின் எண்ணிக்கை அதிகரித்தாலும் வலது பக்கமாகவே தள்ளி அடிப்பர். வடதிசையும் கிழக்குத் திசையும் மங்களமான திசை என்பதில் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. சூடு தள்ளியதும் ஒற்றைப்பட்ட எண்ணிக்கைகளைக் கொண்ட பிணையல்களைக் களத்தில் இறக்குவர். குறிப்பாக 5, 7, 9 என்ற பாங்கில் பிணையல்கள் அமையும். பிணையல் களத்தில் இறக்கப்பட்டதும் களத்தினைச் சுற்றி கந்தினால் சுற்றிக் கட்டிடுவர். அவற்றில் கண்டாயம் விட்டிருப்போர், களத்தில் இறங்கியோர் எவ்வித காரணமும் கொண்டு களத்தினை விட்டு வீட்டிற்குச் செல்ல முடியாது. வீட்டினுள்ளோரோ, பிறரோ கந்தினைக் கடந்து களத்திற்குச் செல்ல முடியாது. அவ்வாறு சென்றால் அவர் திரும்ப வீட்டிற்கும் செல்ல முடியாது. சாப்பாடு வீட்டிருந்து வரலாம். கொண்டு வருபவர், களத்தினுள் செல்ல முடியாது. மாடுகளை வளைக்கும் பொழுது சிந்து பாடி ஓலம் எழுப்புவர். வீட்டுப் பேச்சுக்கள் அங்கு இடம்பெறும். களக்குழு உக்குறிப் பேச்சுக்களே அங்கு இடம்பெறும்.
அமுது, அரைவயிறன், இளைஞன் தோல்வாயன், ஓலம், கலங்கன், கலங்கன் முகாவை, கடகப் பெருவாயன், கந்து களம், குஞ்சுவாயன், குளரி, கூழம், சூட்டுக்கம்பு, சவளம், கிளவன், மொழி, கருங்களம், கட்டுக்களம், கொல்லன், கொம்பு, சூடு, சூழ், கட்டையடிப்போலன், தலைப்பொலி, கரவன் மதிப்பு, நடையன், பல்லிளிச்சான், வெள்ளோடன், பொல்லொடுவன், கொட்ட மீங்க சூங்கையன், வண்ணரமாடன், கட்டையடி நடையன், வாட்டி நடையன், வாட்டியான், பாசம், அமுக்கினி, பொற்கும்வம், பொலிக்கொடி, பெரியபோலன், சின்னப்போலன், போலன், போர் போர்க்குட்டி, பட்டறைப் பெருவாயன், பொலிமிலாறு, வரதராசன், வாயுதாசன், வருடல், பொட்டைபொலி, கடற்கரும்பு, வெளிச்சக்காரன், எடுவான், படுவான், பிள்ளையார் கோலன், ஒட்டுக்கலன், குவரி, போர்க்குட்டி, பெருக்கு கந்துமுறி, துக்கம், பொல்லிடுவான் கண்டாயம், குல்லம்
முதலான உக்குறிகளாக இடம்பெறுவது வழக்கம். சூட்டடிப்பின் முடிவில் வைரப்பொலியின் முதல் அளவைப் பொலியைத் தனியாக எடுத்து கோயில் நெல் என்று சொல்லி வைத்து விட்டு எனையவற்றை தோல்வாயனில் போட்டுக் கட்டுவர். பின்னர் படைப்புக்கு வைக்கப்பட்டிருந்த மதுப்பொருட்களைப் பருகி மகிழ்வுற்று செல்வர்.
சூட்டினை அடிக்க முற்படும் பொழுது நல்ல நாளையும் சுபவேளையையும் பார்த்தே சூட்டினைத் தள்ளுவர். இவற்றிலே வியாழனும் வெள்ளியும் சூடு அடிப்பதற்கு சிறந்த நாட்களாக கணிப்பதோடு கூடிய பொலியினையும் கொடுக்கும் என்று நம்புகிறார்கள். ஏனைய ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் கூடிய பலனைத் தரமாட்டாது என்பது இவர்களது நம்பிக்கை. இந்நாட்களில் சூடு மிதித்தல் தேவதைகள் ஒவ்வொரு நாளுக்கு அண்ணளவான பங்கினைக் கொண்டு சென்று விடும் என நம்புகின்றனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் விளைவின் பதினொன்றும், திங்கட்கிழமையில் பதினொன்றில் ஒன்றும், செவ்வாய்கிழமையில் எட்டிலொன்றும், புதன்கிழமையில் மூன்றிலொன்றும், இருபதிலொன்றும் மொத்தப் பொலியின் கழிவாகச் சென்று விடும் என நம்புகின்றனர். இதனாலே இவற்றைக் கழிநாள் என்பர். யாழ்ப்பாணக் குடாநாட்டு விவசாய மக்களிடத்திலும் இத்தகைய நம்பிக்கைகள் காணப்படுகின்றன.
இரவியில் பத்திலொன்றும்
இந்து பன்னொன்றிலொன்றும்
வருபுதன் மூன்றிலொன்றும்
மண்மகற் கெட்டிலொன்றும்
இருபதிலொன்றுங் காரிக்கியற்புடைக்
கூறிகொள்ளும்
குருபுகார் இரண்டும் நன்றாம்
கொழுஞ் சூடுமிதிப்பதற்கே
என்பது வன்னி யாழ்ப்பாண மக்களது வாய்மொழியாகும்.
வீட்டிற்குக் கொண்டு வரப்பெற்ற நெல்லை வன்னி மக்கள் இரண்டு வழிகளில் பேணுவர். அவை 1) நெல்லுப்பட்டடை 2) கொம்பறை என்னும் இரண்டுமாகும். நெல்லுப்பட்டடை என்பது பறன் அமைத்து அவற்றிலே வைக்கோலை நன்கு பரவி, வைக்கல் கத்தைகளை நாலாபக்கமும் அடுக்கி, உயர்த்தி அதனுள்ளே நெல்லைப் போட்டுப் பின் வைக்கல் கத்தைக் கொண்டே மூடி, முடிவில் வைக்கலால் வேய்ந்து விடுவர். இவற்றில் இடப்படும் நெல் பல வருடங்களுக்குப் பழுதடையாது இருப்பதுடன் எவ்வித பூச்சி புழுக்களும் குத்திச் சேதப்படுத்தா வண்ணம் பாதுகாக்கப்படும்.
கொம்பறை என்பது களிமண்ணால் ஆக்கப்படும் சிறிய குடில் வடிவம் போன்ற சுமார் 10 அடி 12 அடி உயரமுடையவையாக இருக்கும். வட்ட வடிவினதாய் கழுத்தற்ற பானை போன்ற அமைப்புடையதாய் கம்புகள் வைத்துக் கட்டப்பட்டதாய் இருக்கும். அதில் பல பொருட்களை வைத்தெடுப்பர். கொம்பறையிலோ நெல்லுப்பட்டடையிலோ நெல்லைப் போடுவதற்கு முன்பாக பொங்கல் நடத்தி சூரிய வணக்கம் செய்த பிற்பாடே நெல்லை அதனுள் போடுவார்கள். கொம்பறைகளை 500 மரக்கால் நெல் போட்டு பாதுகாக்கக் கூடியதாக அமைக்கப்படுவது வழமையாகும். இதன் மூலம் நெல், பூச்சி, புழு, எலி முதலான ஐந்துக்களால் ஏற்படும் தீங்கிலிருந்து பாதுகாக்க முடிகின்றது. கொம்பறையினுள் நெல்லைப் போட்ட பிற்பாடு சிறிய குடிலால் அதனை வேய்ந்து விடுவர். நெல் வேண்டும் பொழுது குடிலை நீங்கி நெல்லைப் பெற்றுக்கொள்வர். கொம்பறையில் பாதுகாக்கப்படும் நெல்லைப் பழுதின்றி நீண்ட காலத்திற்கு வைத்திருப்பர். வன்னி மக்களால் கண்டு பிடிக்கப்பட்ட சிறந்த கருவிகளுள் நெற்பட்டையமும் கொம்பறையமும் குறிப்பிடலாம். இன்றும் வன்னி மக்கள் தங்கள் இல்லம் தோறும் அவ்வழமையினை பேணியே வருகின்றனர். வீட்டின் முன்பக்கமாக இவற்றைக் கட்டிப் பேணுவர். இவற்றைச் சரிவர பேணுவதன் மூலம் தமது இல்லங்கள் தோறும் இலட்சுமி நிரந்தரமாக குடிகொண்டிருப்பாளென்பது இவர்களின் பூரணமான நம்பிக்கை.
பொதுவாக இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூறுவரை வன்னி மக்களின் விவசாயச் சடங்குகள் யாவற்றிலும் இறை நம்பிக்கையூம் அவற்றைப் பெறுவதற்கான சடங்குகளும் ஒன்றுடன் ஒன்று இணைபிரியாதனவாய், முக்கியத்துவம் பெற்று விளங்கின என்பது உண்மை. இன்று வன்னிமைகள் யாவும் மிகவும் துரிதமாக பொருளாதாரம், கல்வி, அரசியல் முதலான துறைகளில் முன்னேறி வருகின்றன. வன்னிமையில் பொருளாதாரம் விவசாயத்துறையிலே தங்கி இருக்கின்றது. 19 ஆம் நூற்றாண்டில் வன்னிமையில் பொருளாதார நிலைக்கும் இன்றைய நிலைக்கும் மிகுந்த வேறுபாடு காணப்படுகின்றது. 19ம் நூற்றாண்டில் வன்னி மக்கள் குளத்தின் கீழ்சிறு தொகையினை உடையோராய், சிறிய நிலப்பரப்பில் விவசாயத்தையும் மந்தை வளர்ப்பையும் பிரதான தொழிலாகக் கொண்டிருந்தனர். தமது சுயதேவையைப் பூர்த்தி செய்வதையே பெரு நோக்கமாகக் கொண்டனர். பெரு வருவாயை எதிர்பார்க்கவில்லை. இதனால் மரபு வழிச்சடங்குகளைத் தக்கவாறு பேணிப் பாதுகாத்துத் தமது நோக்கினை நிறைவேற்றி வந்தனர்.
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வன்னிமை மக்களின் சமூக பொருளாதார அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனாலே இவர்களால் மரபு வழி பேணப்பட்டு வந்த விவசாயச் சடங்குகளைப் பெரிதும் கைவிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகையதோர் நிலைக்கு சமூக அசைவியக்கத்தினைப் பிரதான காரணமாகக் குறிப்பிடலாம். அதற்கு வன்னிமைகளில் அமைந்த குளங்களின் கீழ் புதிய குடியேற்றத்திட்டங்கள் அமைக்கப்பட்டு அங்கு யாழ்ப்பாணப் பிரதேச மக்கள் குடியமர்த்தப்பட்டமையும் அவர்களின் தேவைக்கு ஏற்பட பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், நிர்வாக மையங்கள், புதிய வீதியமைப்புக்கள், போக்குவரத்துச் சேவைகள் முதலானவை ஏற்படுத்தப்பட்டமையும் விவசாயத்துறையில் ஏற்பட்ட புதிய மாற்றங்களை குடியேற்றவாசிகள் விரும்பி ஏற்றுச் செயல்பட்டமையும் குறிப்பாகப் புதிய இயந்திர சாதனங்களைப் பயன்படுத்தல், நோய்களுக்குக் கிருமிநாசினிகளைத் தெளித்தல், உற்பத்திப் பெருக்கத்தின் பொருட்டு புதிய உரவகைகளையும் துரித முன்னேற்றத்திற்கு வழிவகுத்தனர். இந்நிலையில் வன்னிமை மக்கள் இப்புதிய பொருளாதார அமைப்பை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியத்தை வற்புறுத்திற்று.
வன்னிமைகளில் ஏற்பட்ட குடியேற்றத்திட்டம் காரணமாக யாழ்ப்பாண மக்களின் குடிசனத்தொகைப் பெருக்கம் வன்னிமை மக்களைக் காட்டிலும் பல மடங்காக அதிகரித்தது. இதனாலே வன்னிமைகள் யாழ்ப்பாண (சமய) கலாசாரப் பாரம்பரியத்திற்கு உட்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. யாழ்ப்பாணச் சமூகத்துடன் விரும்பியோ விரும்பாமலோ உறவுகொள்ள வேண்டிய தேவையும் அவர்களால் பின்பற்றப்பட்டு வந்த சமய பாரம்பரியத்தைப் பேணவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. இதனாலே வன்னிமை மக்களால் வழமையாகப் பேணி வந்த கிராமிய வணக்க முறைகளும் சடங்குகளும் நம்பிக்கைகளும் கைவிடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இம்மக்களிடத்தில் இச்சமய சிந்தனை மாற்றங்களைச் சமஸ்கிருத நெறிப்படுகை என்ற மேநிலைப்பண்பாட்டை உணர்ந்து கொண்டதால் ஏற்பட்டதென்று யாரும் வாதிய முடியாது. “யாழ்ப்பாணசமூகசமயகலாச்சாரபாரம்பரியம்” என்ற மேலைப்பண்பாடே இம்மாற்றங்களை இம்மக்களிடத்தில் ஏற்படுத்தியது எனக்கூறல் மிகையன்று.
ஆயினும் வன்னிமை மக்கள் தம்மால் பின்பற்றி வந்த விவசாய சடங்கு முறைகள் யாவற்றையும் அடியோடு கைவிட்டனர் என்று கூறுவதற்கில்லை. நாள் பார்த்தல், புதிர் எடுத்தல், சூடு வைத்தல், சூடு மிதிப்பின் போது சில குழு உட்குறிகளைப் பேணல், பொங்குதல் முதலான அம்சங்கள் வன்னிமை மக்களின் விவசாயச் சடங்குகளின் எச்சங்களாக மிளிர்கின்றன. இத்தகைய தன்மைகள் யாழ்ப்பாணத்து விவசாயிகளாலும் பேணப்பட்டு வருவது இங்கு மனங் கொள்ளத்தக்கதாகும். இவை பொதிநிலை சார்ந்த அம்சம் எனலாம். பொதுவான பண்பாட்டு விழுமியங்கள் பண்பாட்டு மரபுகளை ஒழுங்காக கடைப்பிடிக்கவும் சமய நம்பிக்கைகளைப் பேணவும் உதவுகின்றன. அவ்வகையில் வன்னிமைச் சடங்கு முறைகள் புறநடைகளல்ல.
அடிக்குறிப்புக்கள்
1. கணபதிப்பிள்ளை. க. ஈழத்து வாழ்வும் வளமும், பாரிநிலையம், சென்னை, 1962 பக். 117
2. நாய்ச்சி, தலைவி, அரசி
3. நாய்ச்சி, நாய்ச்சிமார், தலைவி, பெண்தெய்வம் (சைவசித்தாந்தக் கழக வெளியீடு, கழகத்தமிழ் அகராதி 1969 பக். 97)
4. பட்டினப்பாலை அடி 250
5. நெடுநெல்வாடை அடி. 165
6. தொல்காப்பியம் பொருளதிகாரம் செய். 59
7. வித்தியானந்தன் சு.தமிழர் சால்பு, சாரதாவிலாஸ் அச்சுக்கூடம், கும்பகோணம் 197+54 பக். 126
8. மாயோனட மேயக் காடுறையுலகமும்
சேயோன் மேய மைவரயுலகமும்
வேந்தன் மேய தீம்புனலுலகமும்
முல்லை, குறிஞ்சி, மருத நெய்தல் லெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
(தொல்காப்பியம், பொருளதிகாரம் செய். 5)
9. வித்தியானந்தன் சு.தமிழ் சால்பு 1954 பக் 106 – 107
10. சீனிவாசன் இரா.சத்தி வழிபாடு, ஸ்டார் அச்சகம், திருநெல்வேலி 1975. பக் 16, 17
11. மேலது நூல் பக். 17
12. கண்டியில் திசாவாக இருந்த வன்னியனே சிங்கள மக்கள் மத்தியில் வன்னியர் குலம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தான் என்பது வரலாற்று ஆசிரியர்களின் முடிவாகும்.
13. கணபதிப்பிள்ளை க.ஈழத்து வாழ்வூம் வளமும். 1962. பக். 119
14. வையாபாடல், 1980 செய்.21, பக். 56 – 75
15. கணபதிப்பிள்ளை க.ஈழத்து வாழ்வூம் வளமும். 1962, பக்.119
16. மேலது நூல். 1962
17. முனிசாமி முதலியார், பிரபஞ்ச உற்பத்தி, பக். 490
18. வற்றாப்பளை கண்ணகை அம்மன் கருணை மலர், கண்ணகி அம்பாள் பரிபாலன வெளியீடு, மெய்கண்டான் அச்சகம், கொழும்பு 1978, பக்.74
19. அருணாசலக் கவிராயர் வட்டுவாகலில் பிறந்தவர். இவர் ஒரு அண்ணாவியார், நாடகாசிரியர். கோவலன் கூத்து, காத்தவராசன் கூத்து முதலான கூத்துக்களை மேடையேற்றியவர், சிறந்த கவிஞர்
20. வற்றாப்பளை கண்ணகை அம்மன் கருணை மலர். 1978 பக். 74
21. மேலது நூல்
22. பேர் கொண்ட முருகேசர் தெய்வயானை வள்ளியும்
பெருமையூறு வடுகேசனும் பிரபலம்புரி வீரபத்திரனும்
மரியனும் மாரியம் மகனாம் காத்தவராசக் கடவுளும்
கருங்கறுப்பினொடு குருநாத சுவாமியும்
கன்னிமார் நாச்சிமாரும்
பேர் விண்ட தேனினருள் புரிந்தெம்மை யாளுகின்ற
பொற்பினுடை னிரு பாதமே போற்றினன்
வருதுயர் கடிந்தீர்த்து நித்தமும்
கருணை பொழியூமுகிலென வருவைதே
(சிங்க ராசாவின் கொப்பி புதுக்குடியிருப்பு)
23. நீலகண்ட சாஸ்திரி கே.என்
24. ஸ்ரீனிவாசன் இரா.பி.ஆர்.நாம் வணங்கும் தெய்வங்கள், சென்னை, இளங்கோ பதிப்பதகம் 1959 பக்.36
25. சீனிவாசளன் இரா.சத்தி வழிபாடு 1975 பக்.33
26. மேலது நூல் பக்.33
27. முனிசாமி முதலியார், பிரபஞ்ச உற்பத்திப க்.459
28. சிவனுக்கும் அந்தகாசுரனுக்குமிடையே ஏற்பட்ட போரில், அந்தகாசுரனின் உடலிலிருந்து சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் மற்றொரு அந்தகாசுரன் தோன்றினான். இதை நிறுத்துவதற்காகச் சிவன் யோகேஸ்வரி என்பவளுடன் இவ்வேறு சத்திகளையும் சிவன் உற்பத்தி செய்தார். இவர்கள் அசுரனின் இரத்தத்தைக் கீழே விழாமற் கடித்து சிவன் அவனை அழித்தனர்.
(ஸ்ரீனிவாசன் பி.ஆர்.நாம் வணங்கும் தெய்வங்கள். 1959 பக்.36)
29. சிங்காரவேலு முதலியார் ஆ.அபிதான சிந்தாமணி, மதுரைத்தமிழ்ச் சங்கப் பிரசுரம், சென்னை, வைஜந்தி அச்சகம். 1910 பக்.348 – 349
30. கணபதிப்பிள்ளை க.ஈழத்து வாழ்வும் வளமும் 1962 பக்.121
31. மாற்றாஸ்மயில் செ.வன்னிவள நாட்டுப்பாடல், செட்டியா அச்சகம், யாழ்ப்பாணம். 1980
32. வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில் வழக்கில் வழங்கும் உபகாpப்பு என்ற சொல்லுக்கும் வட்டுவாகல் கோயில் வழக்கில் வழங்கும் உபகரிப்பு என்ற சொல்லுக்கு மிடையிலே பொருள் வேற்றுமைகள் உண்டு. வற்றாப்பளைப் பொங்கல் அரிசி, மடைக்கான வழவகைகள், முதலான பண்டங்களை நிரந்தரம் அளிப்போரையே உபகரிப்போர் என அழைப்பர். வட்டுவாகலில் வாற்றாப்பளையில் நோன்புகாரர்கள் என்று அழைக்கப்படுவோரையே உபகரிப்போர் என்று அழைப்பர்.
33. கோபியர் – கோவியர்
34. வேளார் – குயவர்
35. பூசாரியார் முள்ளியவளையில் வசிப்பவர், கோபியரும் முள்ளியவளையில் வசிப்பவர்கள் ஆச்சரும் சலவைத் தொழிலாளியும் முல்லைத்தீவில் வசிப்பவர்கள் தோட்டி கணுக்கேணியில் வசிப்பவர்
36. வன்னிப்பிரதேச ஆலயங்களிலே கோபியரே பாக்குத் தெண்டல், தீர்த்தமெடுத்தல், நோன்புக்காரர்களின் உணவுக்காகக் கொடுக்கப்படும் அரிசியைக் குத்துதல், சமைத்தல் பொங்கிப்படைத்தல் முதலான கடமைகளைச் செய்வர். ஆனால் வட்டுவாகலில் கரைந்துறை மக்களே பொpதும் இக்கடமைகளில் பத்தியோடு ஈடுபடுகின்றார்கள். தச்சுத் தொழிலாளி ஆலய கட்டிட வேலைகளைப் பழுது பார்ப்பதுடன், பந்தல் போடுதல், உடுக்கு அடித்தல், சிந்துபாடல், மடைபோடும் இடங்களுக்குப் பூசாரியாருடன் கூடிச் செல்லல் முதலான பணிகளில் ஈடுபடுவர். தோட்டிமார் பூசைக்குரிய காலங்களிலும் பறையை ஏற்றியும் இறக்கியும் முழக்கம் செய்வர். சலவைத்தொழில் மேலாப்புப்படித்தல் கச்சு நேருகற்கான துணியைக் கொடுத்தல், தூளி பிடித்தல், முதலான சேவைகளில் ஈடுபடுவர். கும்பம் வைத்தல், மடைபோடுதல், நாச்சிமாரைக் கும்பத்தில் ஆவாகணம் செய்தல், பரிகலம் வழிவிடுதல், மடை பிரித்தல், விபூதி கொடுத்தல், கட்டுச் சொல்லுதல், முதலான கடமைகளைப் பக்தி தவறாமல் கடைப்பிடித்து ஆலய பூசையை வழி நடத்திச் செல்பவர் பூசாரியாரோ ஆவார்.
37. வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கருணை மலர். 1978 பக்.7
38. மற்றாஸ் மயில், செ.வன்னிவள நாட்டுப்பாடல்கள், “நாச்சிமார் சிந்து” 1980 பாடல் 2-5
பின்னிணைப்பு
வன்னிமைகளின் சூட்டுக்களத்தில் உபயோகிக்கப்படும்
குழு உக் குறியீடுகள்
குழுஉக்குறியீடுகள்பொருள்மரபு
அக்கந்து, முகப்பொலி – கழிவு நெல்
அமுது – சோறு
அலங்காரி – கூழந்தட்டி
அரைவயிறன் – நன்றாக முற்றாத நெல்
ஆராய்தல் – கூளங்களைத் தட்டிச் சுத்தமாக்கல்
இளைஞன், கோணியல் – சாக்கு
ஓலம் – பொலி சொல்லிப் போடுதல்
உப்பட்டி – வெட்டிய அரிவிகளின் தொகு
எடுவான் – கிழக்குக் கரை
கட்டு – உப்பட்டி பல சேர்ந்தது
கடகப் பெருவாயன் – கடகம்
கட்டையடி போலன்
கடற்கரும்பு – மீன்
கண்டாயம் – கடவை
கந்து – தண்டோடு காணப்படும் நெல்
கட்டுக்களம் – நெற்களம்
கட்டுமிலாறு – கூழ்ந்தட்டி
கந்துமுறி – எல்லையை அவிழ்த்தல்
கலங்கன் – தண்ணீர்
கலங்கன் முகாவை – தண்ணீர் குடித்தல்
கட்டையடி நடையன் – களத்தில் களக் கட்டையுடன் கட்டியிருக்கும் மாடு
கருங்களம் – நடுக்களம்
கருக்கல் – புகையிலை
கரவன்மதிப்பு – நெல் அளத்தல்
களம் பொலிதல் – சூடு அடித்து முடித்ததும் வீட்டுக்கு கொண்டு செல்லல்.
குல்லம் – சுளகு
குடில் – வீடு
குளரி – நெற் கதிர் கொத்து
கூழம் – நெல் தூற்றும் போது பறக்கும்
கழிவுகள்
கூட்டுக்கம்பு – சூடு அள்ளிப் போடுவதற்குப் பயன்
படுத்தப்படும் சோடிக்கம்பு
கூரன் போலி – நெல்
கரைஞ்சான் – வாழைப்பழம்
கொட்டை – பாக்கு
கொல்லன் – சின்ன மண்வெட்டி
கொம்பு – நெல் தூற்றும் போது சிதறும் நெல்
கோல் – சாணகம்
கூங்கையன் வண்ணரமாடன் – பேய்
சவளம் – அடிபடாத நெல்
கள்ளாம்பித்தல் – கிண்டுதல்
சூடு – பல நூற்றுக்கணக்கான கட்டுகள் சேர்ந்தவை
சூடு தட்டி – சூடு வைக்கும் பொழுது உப்பட்டிகளை ஒழுங்குபடுத்த உபயோகிக்கப்படும் கருவி.
சூழ் – தீப்பந்தம்
தூக்கம் – நித்திரை
நடையன் – மாடு
நடையன் வளைத்தல் – மாடுகளைச் சாய்த்தல்
நெடு யாழி – தண்ணீர்
படுவான் – மேற்கு
பாசம் – கயிறு
பட்டறைப் பெருவாயன் – பட்டறை
பெருகு – வா போ என அழைத்தல்
பெருக்கல் – மாடுகளை அவிழ்த்துக் கட்டல்
பெரிய போலன் – பெரிய மனிதர்
பிரளம் பிடுங்கல் – வைக்கோலை மேலெடுத்தல்
பொலி – பொலி என்றதும் நிற்க வேண்டும்
பொலிக் கொடி முறித்தல் – பொலிக் கொடியைக் கிளறிவிடல்
பொலிமிலாறு – மாட்டுக்கு அடிக்கும் தடி
பொல்லிடுவான் – தேங்காய்ப்பாதி
பொலி – நெற்கும்பம்
போர் – சூட்டிலும் சிறியவை. சூட்டைப்போன்றது
பிள்ளையார் போலன் – பிள்ளையார் நெல்லை முதலில் அளப்பவன்
வருணன் – மழை
வலிச்சான் – ரொட்டி
வரதராசன், வாயூதரன் – காற்று
வாட்டி – களத்தின் ஓரம்
வாட்டிகட்டுதல் – கரையோரத்திற் கிடக்கும் பொலிக்கொடி
வாட்டி நடையன் – களத்தின் ஓரத்தில் நிற்கும் மாடு
வாடல் – வெற்றிலை
வெள்ளை – சுண்ணாம்பு
வெளிச்சக்காரன் – நெருப்பு
வெள்ளோடன் – தேங்காய்
வைரபிரப் போலி – மண்கட்டி
நன்றி -ஆக்கம் – இரா வை.கனகரத்தினம் (M.A), விரிவூரையாளர், இந்துப்பண்பாடு, தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
மூலம் – வவுனியா பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கம்
Leave a Reply