வட்டுக்கோட்டை கிராமியக்கலைகள்

வட்டுக்கோட்டை கிராமியக்கலைகள் ஆனது வட்டுக்கோட்டையில் காலம் காலமாக கிராமியக்கலைகள் எனும் கூத்துக்களும் நாடகங்களும் நடைபெற்று வருவது சிறப்பானதொரு விடயமாகும். இக்கலைகள் எவ்வாறு இங்கு தோற்றம் பெற்றது என தெளிவாக அறியமுடியவில்லை எனினும் இற்றைக்கு ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்னர் சின்னப்பு சரவணப் பரியாரியார் என்பவர் தருமர் வேடந்தரித்து ஆடியதாக உறுதியாக அறிய முடிகிறது. அந்த வகையில் சரவணப் பரியாரியார் அவர்களின் பரம்பரையில் மூன்றாம் தலைமுறை கலை வாரிசு என்பதிலிருந்து இக்கலைகள் இங்கு ஏறத்தாழ 200-250 ஆண்டுகளுக்கு முன்னர் உருப்பெற்றிருக்கலாம் என்பது தெளிவாகிறது. மேலும் ஆரம்பத்தில் இக்கலைகள் கோயிலுக்கு பரிகாரம் செய்யும் வகையிலேயும் நேர்த்திகடன் நிமிர்த்தமும் தான் வளம் பெற்று வளர்த்திருக்கிறது. வழமையாக கூத்துக்களில் வடமோடி, தென்மோடி எனும் இரு பிரிவுகளை காணலாம் ஆனால் வட்டுக்கோட்டையில் இவ்விரு மோடிகளும் கலந்த ஒரு மோடியாக புதிய பாணியில் சிவன்கோவிலடி கிராமத்தில் கூத்துக்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. வட்டுக்கோட்டை சிவன்கோவிலுக்கு அருகிலமைந்த முத்துமாரியம்மன் கோவிலிலேயே அம்மன் தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைப்பாள் , ஊருக்கு வரும் பிணிகளை எல்லாம் அகற்றிவைப்பாள் எனும் நம்பிக்கையுடன் நேர்த்திவைத்து இம்முத்துமாரியம்மன் கோயிலை சுற்றி வணங்கியே ஆட்டத்தை ஆரம்பிப்பர். கூத்து முடிவடையும் போதும் இங்கே முடிப்பது வழக்கம். இங்கு நடைபெற்ற கூத்துக்களில் தருமபுத்திர நாடகம், விராட நாடகம், குருஷேத்திர நாடகம், வலைவீசு புராணம், சிந்து நடைக்கூத்து, போன்ற கூத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும் இங்கு நாடக கதாபாத்திரங்களை வம்சரீதியாக பிரித்து ஆடிவருவதால் இக்கிராமத்தில் அந்தந்த வம்சங்கள் அவர்கள் கொண்ட பாத்திரத்தை குறிப்பிட்டு தற்போதும் அழைக்கப்பட்டு வருவதை காணலாம். மேலும் இங்கு வேடந்தரித்து ஆடும் கூத்து கலைஞர்களுக்காக அக்காலத்தில் சிறப்பாக தச்சர்களும் இருந்திருகிறார்கள். அவர்களால் தனித்துவமாகவும் சிறப்பையும் செய்யப்பட்ட வாள்கள், வில்கள், கதைகள், முடிகள், திரிசூலங்கள், வேல்கள், கமண்டலங்கள் என்பன இங்கு பயன்படுத்தப்படிருக்கின்றன. இங்கு நடைபெற்ற கூத்துக்கள் யாவும் எத்திசையிலும் இருந்து மக்கள் பார்க்கும் வண்ணம் வட்டக் கொட்டகையிலேயே இடம் பெற்றிருக்கின்றன. வட்டுக்கோட்டை எனும் பெயர் வந்தது இதனால் தான் என்றும் கூறப்படுகிறது. இக்கிராமத்தை பொறுத்த வரையில் பெரும்பாலான குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் கலைகளை சார்ந்தே பின்னப்பட்டு இருக்கின்றன. இங்கு நடைபெறும் ஆட்டங்களில் குதிரைஆட்டம், பொம்மலாட்டம், காவடியாட்டம், அனுமனாட்டம், பூதராட்டம், சீனடிசிலம்படியாட்டம், சூரனாட்டம், நடேசராட்டம் என்பன பிரபலமானவையும் கூட. மேலும் கப்பற்பாட்டு , சேவற்பாட்டு போன அழிந்து போன கூத்துக்களும் இங்கு நடைபெற்றிருக்கின்றன. இவ்வாறு இக்கலைகள் இவ்வூர் சார்ந்த பல குடும்பங்களால் சிறப்புற வளர்க்கப்பட்டன என்பதற்கு இங்கு உள்ள பெரும்பாலானோர் பெற்றிருக்கும் கலைவாரிதி, கலாபூஷனம் போன்ற பட்டங்களே சான்றாகும்.
தற்போதைய கலைகளின் நிலைப்பாடு
வட்டுக்கோட்டையில் காலம் காலமாக வளர்க்கப்பட்ட கலைகளில் ஒரு பகுதி தற்போது அழிந்து வரும் நிலையில் இக்கலைகளை தற்போதும் வட்டூர் மக்களிடையே வளர்ந்து வரும் சந்ததியினரிடையே பழக்கும் பணியை திருவாளர் க.நாகப்பூ, நாகலிங்கம் புவனசுந்தரம், வே.தவரூபசிங்கம், வ.யோகானந்தசிவம் போன்ற கலைஞர்கள் இன்றும் தொடர்வதுடன் க.நாகப்பூவிடமிருந்தான அவரது கூத்துப்பொறுப்புக்களை அவரது மகன் பொறுப்பேற்றிருக்கிறார். இவர்கள் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று இக்கூத்துக்கலைகளை நடாத்திவருகின்றனர். யாழ்பாணத்தில் பொதுவாகப் பல இடங்களிலும் காணப்பட்ட இக்கலைகள் இன்று அழிவுற்று ஆக மூன்றே மூன்று இடங்களிலேயே எஞ்சிபோயிருக்கின்றன. ஆனால் இன்றும் சிறப்புற இக்கலைகளை நடத்திவருவதில் திருவாளர் நாகப்பூ அவர்களின் குடும்பமும் அவரின் மகனும் பெரும் பங்காற்றி வருகின்றனர். இவர்கள் பரம்பரையாக கலை வளர்க்கும் குடும்பத்தை சார்ந்தவர்கள். இவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கூத்துக்களுக்கான சிறப்புச் சான்றாக 2011 ஆம் ஆண்டு இவர்கள் வடமாகாணத்தில் சிறந்த கூத்துக் குழுவினராக தெரியப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் பணமின்றி ஏதுமில்லை என மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையில் இவர்கள் ஆடும் கூத்துக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி போதுமானதாகவில்லை. நாகப்பூவின் மகனின் தலைமையின் கீழ் 15 .பேர் கொண்ட குழு இக்கலைகளை இன்றும் வளர்த்து தொடர்கின்ற போதும் போதிய நிதியுதவியின்றி இக்கலைகளை வளர்ப்பதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பரம்பரையாக இக்கலைகளை தொடர்ந்து வந்த பலர் இன்று வெளிநாடுகளிட்கும் வேறிடங்களிலும் வசிப்பதனால் புதியதலை முறையினரிடையே இக்கலைகளை வளர்த்தெடுப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதுடன் போதிய பண வசதியும் இல்லாது இருப்பது கவலைக்குரியது. குதிரையாட்டம் அனுமனாட்டம் மயிலாட்டம் போன்ற ஆட்டங்களுக்கு உடை தயாரிப்பதிலும் உபகரணங்கள் தயாரிப்பதிலுமே பெரும் பணம் செலவழிந்து விடுகிறது. அதைவிட இவர்கள் ஆடுவதற்கு பயன்படுத்தும் அனுமன் பொம்மைகள் , குதிரைகள், மயில் வடிவங்கள் போன்றன இவர்களினாலேயே தயாரிக்கப்படுகின்றது இவர்களின் திறமைக்கு மேலொரு எடுத்துக்காட்டாகும்.. இப்படியான கலைஞர்களுக்கு தன் ஆதரவை வழங்கி வரும் அரசாங்கத் தினைக்களமாக வடமாகாண பண்பாட்டு திணைக்களம் இருக்கின்ற போதும் இக்கூத்து குழுவினர் எதிர் நோக்கும் பிரச்சனைகளும் ஏராளம். மேலும் இன்றைய நிலையில் இக்கலைகளை தொடர்பவர்கள் எல்லோருமே வேறொரு வாழ்வாதார தொழிலில் ஈடுபடுபவர்கள். எனவே தம் நேரத்தில் ஒரு பகுதியை இக்கலைகளுக்கு ஒதுக்கி இன்றும் இக்கலைகளை இவர்கள் தொடர்வதன் நோக்கம் பாரம்பரிய கலைகளை வளர்ப்பதே என்றால் மிகையாகாது.
நன்றி- மூலம் -ஊர்ப்பக்கம் இணையம்
Leave a Reply