யாழ் – இசைக்கருவி

Sharing is caring!

பண்டை இன்னிசைக்கருவி- பண்டை காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த இன்னிசைகருவிகளில் யாழ் என்னும் நரம்பு கருவி மிகவும் சிறப்புடையதாகும். முற்காலத்தில் வாழ்ந்த இசை புலவர்கள், துளைகருவிகளாகிய வேய்ங்குழல், நரம்பு கருவியாகிய யாழையும் துணைக்கொண்டே குரல் முதலிய ஏழிசைகளையும் குற்றமற ஆராய்ந்து, பெரும் பண்புகளும் அவற்றின் வழி பிறக்கும் திறன்களும், ஆகிய நுட்பங்களை இனிமை பொருந்த வசித்து கட்டியுள்ளார்கள் . முற்காலத்தில் யாழ் கருவியை நிலைக்களம் ஆக கொண்டே பெரும் பண்களும் அவற்றின் திறன்களும் நுண்ணிதின் ஆராய்ந்து வகைபடுத்தபட்ட, யாழ் நரம்பின் துணை கொண்டு ஆராய்ந்து கண்ட பண் வகைகளை யாழின் பகுதி – தொல். அகம் –  எனவு, அப் பண்புகளின் இயல்புகளை விளக்கும் இசை நூலை நரம்பின் மறை – தொல். தூன்மரபு எனவும் குறிப்பிடுகின்றார்கள்.

அந்தகக்கவி” என்று அழைக்கப்பட்ட வீரராகவன் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து தனது யாழ் வாசிக்கும் திறமையால் மன்னரிடமிருந்து வடபகுதியிலுள்ள மணற்றிடறை பரிசாகப்பெற்று யாழ்ப்பாணம் என்ற பெயரையும் இட்டு தன்குடிகளை வருவித்து ஆட்சி நடத்தினான் என மயில்வாகனப்புலவர் குறிப்பிடும் ஐதீகம் நீண்டு செல்கின்றது. அன்று வாசிக்கப்பட்ட யாழ் இன்று வரை நம்மில் பலருக்கு தெரியாது. இந்த யாழின் அமைப்பையே படத்தில் காண்கிறீர்கள்.

இன்றைய யாழ் நகரத்தின் மையத்தில் “ஐநூற்றுவன்வளவு” என்ற ஒரு குறிச்சி காணப்படுகின்றது. தோம்பில் குறிப்பிடப்பட்ட ஐநூற்றுவன் வளவு இன்றைய யாழ் வைத்தியசாலைக்குத் தெற்குப்பக்கமாக உள்ள வர்த்தக நிலையங்கள், மணிக்கூட்டுக் கோபுரம், நூலகப்பரப்பு மற்றும் யாழ்.கோட்டை வரைக்கும் பரந்து காணப்படுகின்றது. ஜாவகன் பட்டினம் சாவகச்சேரி என மாற்றமடைந்தது போன்றே ஐநூற்றுவன் வளவு ஐநூற்றுவன் பட்டினமாகி, ஜாழ்ப்பாண பட்டினம் என மருவி இன்று யாழ்ப்ப(h)ணம் என வழங்குகின்றது எனலாம்.

கி.பி 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழமண்டலத்திலிருந்து படையெடுத்து வந்த முதலாம் பரா-அந்தகச் சோழன் (பராந்தகன்) யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதனையும் தனது அரசியல் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருந்த செய்தியை “மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பர கேசரியான்” என்ற அம்மன்னனது விருது உறுதிப்படுத்துகின்றது. பார் ஆளும் அந்தகச்சோழனையே “யாழ்ப்பாண வைபவமாலையார்” அந்தகக்கவி வீரராகவன்” என்ற புனைப்பெயரில் வழங்கிய கதை மரபில் இணைத்துக் கூறியிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது. அந்தகன் என்ற ஒரு பெயர் வழியுடனோ அல்லது அரசியல் தலைமைத்துவத்திற்குரிய தலைவனுடனோ தான் யாழ்ப்பாணம் என்ற பெயர் வழக்கு உருவாகியிருக்க வேண்டும். அவ்வாறாயின் முதலாம் பராந்தகச்சோழனது பணி யாழ்ப்பாணப் பண்பாட்டுத் தோற்றத்துடன் மிகவும் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறாயின் யாழ்ப்பாண வைபவமாலையார் குறிப்பிட்டுள்ள “அந்தகன்” யார்? முதலாம் பராந்தகனா? யாழ்ப்பாணத்திற்கும் பராந்தகனுக்கும் இடையிலான தொடர்புகள் யாவை? இவ்வினாக்கள் வரலாற்றாசிரியர்களுக்கே சமர்ப்பணம்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com