நீத்துப்பெட்டி

இன்றும் கிராமம், நகரப்புறங்களில் பாவனையில் உள்ள நீத்துப்பெட்டி எம் முன்னோர்களால் எங்களுக்கு தந்த ஒரு சொத்து. தமிழர் பாரம்பரியத்தில் பல்வேறுபட்ட உணவுகள் காணப்பட்டாலும் காலை, இரவு வேளை உணவுகளில் பெரும்பாலும் பிட்டு காணப்படும். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எல்லா வீடுகளிலும் ஒரு வேளையென்றாலும் பிட்டு சாப்பிடுவார்கள். அந்தளவிற்கு இந்த உணவு பிரபலமாக உள்ளது. அரிசி மா, கோதுமை மா கொண்டு தயாரிக்கப்படும் பிட்டு அவிப்பதற்காக இந்த நீத்துப்பெட்டி பாவிக்கிறார்கள். இது பெரும்பாலும் பனை ஓலை கொண்டு இழைக்கப்படும். தற்போது பிரம்பு கொண்டு இழைக்கப்பட்ட நீத்துப் பெட்டிகளும் சந்தைகளில் காணப்படுகின்றது.
எப்படி இழைக்கிறார்கள் ?
பனையோலையின் குருத்தை வெட்டி நிழலில் அல்லது மெல்லிய வெயிலில் நன்றாக காயவிட்ட பின் அதை சீரான அளவுகளில் நீள நீள கீலங்களாக பன்னச் சத்தகத்தின் உதவியுடன் வெட்டுவார்கள். இவ்வாறு வெட்டப்பட்ட ஓலைக்கீலங்கள் ஒருவிதமான ஒழுங்கு முறையாக பின்னப்பட்டு நீத்துப்பெட்டி உருவாக்கப்படும். இதற்காக முற்றிய பனை ஓலையை பாவிக்க முடியாது. அதைப் பாவித்தால் பின்னும் போது ஓலை மடிந்து உடைந்து விடும். அதற்காக மிகவும் இளம் குருத்தோலைகளையும் பாவிக்க முடியாது. பொதுவாக பனை வட்டில் உள்ள ஆகவும் இளம் குருத்தில் இருந்து இரண்டாவது அல்லது மூன்றாவது குருத்தோலைதான் வெட்டி எடுக்கப்படும். இளம் குருத்தோலையென்றாலும் பின்னப்பட்ட நீத்துப்பெட்டி உறுதியில்லாமல் வளையக்கூடியவாறு இருக்கும்.
எப்படி பாவிக்கிறார்கள் ?
இதற்காக நீத்துப்பானை என்ற ஒரு பானை பாவிக்கப்படும். அதில் சிறிதளவு நீர் விட்டு நன்கு கொதிக்க விட்ட பின்னர்தான் நீத்துப்பெட்டியில் பிட்டை நிரப்பி அதில் வைத்து நீராவி வெளியில் போகாதவாறு நீத்துமூடி என்ற பகுதியால் மூடி சில நிமிடங்கள் அவிக்கப்படும்.
என்ன நவீன மயமாக மாற்றங்கள் ஏற்பட்டாலும் நீத்துப்பெட்டியில் பிட்டு அவித்து சாப்பிடுவதில் உள்ள சுகமே தனியானதுதான்.




Leave a Reply