நடைவண்டி

மரத்தால் செய்யப்பட்ட நடைவண்டி இது சிறுவர்கள் உருட்டும் சிறியதோர் உபகரணம். மரத்தால் செய்யப்பட்ட நடைவண்டியை சங்ககாலத்தில் குழந்தைகள் நடைபயில பயன்படுத்தினர்.
‘நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக் கால் சிறு தேர் முன் வழி விலக்கும் ‘
(பட்டினப் பாலை 20-25)
தச்சச் சிறார் நச்சப் புனைந்த
ஊரா நல்தேர் உருட்டிய புதல்வர்
(பெரும்பாணாற்றுப்படை -248-249)
என்ற பாடலடிகள் எடுத்தியம்புகின்றன. மரத்தை மூலப்பொருளாகக் கொண்டு கைவினைப்பொருட்கள் தயாரிப்பவர்களின் பிள்ளைகளும் விரும்பும்படியாக செய்யப்பட்ட நல்ல சிறுதேர்களை உருட்டித் திரிந்தனர்.
நடைவண்டி என்பது குழந்தை பிறந்து, பின்னர் தவழ்ந்து, நிற்கத் தொடங்கிய பின்பு நடை பயில்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வண்டி அல்லது விளையாட்டுப் பொருள் ஆகும். இந்த நடைவண்டி மரத்தால் செய்யப்பட்டு மூன்று சக்கரங்களுடன் மெதுவாக தள்ளிக் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டதாகும். தற்போது நடைவண்டிக்குப் பதிலாக புதிய வடிவிலான பொருட்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியதால் நடைவண்டி பயன்பாடு இல்லாமல் போய்விட்டது
இப்படியான நடைவண்டிகள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலுள்ள தமிழ்மக்களின் குழந்தைகள் நடைபயிலும் போது பாவித்ததை பார்த்திருக்கிறோம்.
இப்போது தமிழ்மக்களின் பாவனையிலிருந்து அருகிவருவதாகவே தோன்றுகின்றது. இந்நடை வண்டியானது சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டது.
இதனையே மக்கள் மீளவும் பாவித்தால் ஒருசிலருக்கு தொழிலாகவும், நாம்வாழும் பூமி சுற்றுப்புறச்சூழலுக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது குழந்தைகளுக்கு கொடுத்து அழகுபாருங்கள்.
நடைவண்டி தொடர்பாக நாவிஷ் எழுதிய கவிதையொன்று
அண்ணனுக்குப் பிறகு அக்காவை
அவளுக்குப் பிறகு என்னையும்
நடக்க வைத்ததை
அண்ணனின் பிள்ளைக்குதவுமென
வைத்திருந்தாள் அம்மா…
அவனோ
புதியதாய் ஒன்றை வாங்கிவிட
யாருக்கும் தெரியாமல் ஒருநாள்
விறகாக்கிவிட்டாள் அண்ணி!
யாரேனும் இப்போது
ஏற்றிவிட்ட ஏணி பற்றிப் பேசினால்
நடக்க உதவிய நடைவண்டி
நினைவுக்கு வருகிறது
நன்றி – தகவல் உசாத்துணை – பட்டதும் சுட்டதும் இணையம்.




Leave a Reply